கடற்கரை மோதல்

காதல்தான் இல்லாமல், கொஞ்சமும் உய்யாமல்,
சாதல்தான் குற்றமென்றே பேசுகின்றார் - உன்னுடன்
மோதல்தான் பலகொண்டு வென்றேனே - என்றும்
வாழ்தல்தான் உன்னுடன் சத்தியம் - மாப்பிள்ளை
தேடல்தான் வேண்டாம், பெற்றோரிடம் சொல்!

உன்வீடு நான் வந்தால் தண்டல்தான்
என்வீடு நீவந்தால் கந்தல்தான் - காதல்செய்ய
தன்வீடு தருமோர் நண்பன் எனக்கில்லை
என்னோடு வா கண்மணியே - காதல்
மண்வீடெனும் கடற்கரை முகாம் சேர்வோம்!

வானமே கூரையாய் மறைவிடம் பார்
மானமே போகும் உறைவிடம் பார்
கானமே இசைக்குதம்மா கடல்தான் - காதலுக்கு
ஊனமே இல்லை இவ்விடம் இருக்கும்வரை
ஆனாதே ஆகட்டும்வா காதல் ஆற்றுவோம்!

அலைபார் அதில்வரும் நுரைபார் - அதுபோல்
உலையிட்டு கொதிக்குமென் மனம் பார்
சிலைசெய்ய ஆசைதான் உன்னை - ஆனால்
கலை வெட்கிக் குனிந்திடுமே பெண்ணே
மலைபோல் படைவந்தாலும் தருகிலேன் உனை!

காற்று ஊஞ்சலிலே கண்கள் சொருக
மாற்றேதும் இல்லாமல் என்மார்பினுள் நீ
வேற்றுலகம் சென்றே உறங்கிப் போனாய்
ஊற்றெழும் காதலை என்னடிசெய்வேன் - ஆவலை
ஆற்றிய பின் கண்ணுறங்கு வெண்மயிலே!

சுழிக்காற்றில் ஓர்ப் பெருங்காற்று - உன்தலை
மயிர்க் கூட்டைத்தான் கலைத்ததுவோ - ஐயோயென்
வயிற்றெரிச்சலைக் கிளப்பாதே காற்றே - வெண்
தயிர்க்கிண்டிய அலைகள் போதாதோ? - என்
உயிர்க்குருவி உறங்குகிறாள் ஓடி விடு!

சளைக்காமல் சூடேறும் கடல்மண்ணிலே - முளைத்தும்
முளைக்காமல் வீடேறும் காதல் பார்
களைக்காமல் இவர்கள் களிப்பதைப்பார் - இப்படி
மளைக்காமல் கண்மூடி உறங்குகிறாயே - காதலில்
திளைக்காமல் போகுதடி நாழியெல்லாம்!

கக்கத்தில் முகம் புதைத்தே உறங்குகிறாய்
பக்கத்தில் பாரடி புது விளையாட்டை!
திக்கத்துத் திரியுதடி காதல் அங்கே
துக்கத்துக்கு கூப்பிட்டாலும் வராது - அது
சொர்கத்து வாசலை தொட்டு விட்டது!

சூழ்நிலை மறந்த காம நரிகளிரண்டு
பாழ்போன காதல் கொண்டே வர
கீழுள்ளஉன் பூப்பாதம் தெரியாமல் மிதிக்க
ஆழ்கிணற்றுள் அகப்பட்டது போல் - உன்
யாழ்குரல் கிழிந்தே நீ கதற!

கூசாமல் உதட்டை ஒட்டிய நரிகள்
பேசாமல் கடந்து நகர - எனைப்பார்த்து
"நேசமா இருக்கேன்னு சொன்னியே இப்போ
ரோசமிருந்தா அவன அடி" என்றாய்
நாசமா போச்சுடா என்றுமட்டும் புரிந்தது

பிழையாய் மிதித்தார் பொன்மானே - மீன்விழியில்
மழையாய் உதிருதே வைரக் கண்ணீர்
உழையாய் உழைத்தேன் உனைப்பெறவே - இரு
கிழியாய் கிழித்து எறிவேன் அவனை
பழியாய்வந்த பரதேசி நில்லடா அங்கே!

கையுயர்த்திக் குவித்த விரல்கள்கொண்டு - அவன்
மையத்தில் வைத்தேன் இடி ஒன்று
வையத்தில் இதுபோல் யார்மேலும் - இதுவரை
கைவைத்ததில்லை என இதயம் சுரண்ட
நையப்புடையென நெய்தடவிக் குதித்தாள் காதலி!

கவ்விய மண்ணை துப்பிய அவன்
எவ்விதம் கொண்டே தாக்குவான் என
செவ்விய பார்வை ஓங்கியே நின்றேன்
கூவிய குயில்போல் பின்வந்து - காதலி
பவ்வியமாய் அவனை விட்டிட சொன்னாள்!

பிரியும் நேரமெனும் பேய் வந்தது
புரியாத ஓர் நோய் வந்தது
சரி என்று சொல்லியே அவள் கொஞ்சம்
அறிவுரையும் சொன்னாள் "பாத்து போ வீட்டுக்கு"
மரியாதிருப்பேன் உனக்காக நாளை வா!

எழுதியவர் : ஒளி முருகவேள் (9-Oct-16, 8:42 pm)
சேர்த்தது : ஒளி முருகவேள்
பார்வை : 1136

மேலே