பிடித்த கவிதை - ஆறு ஆறாய் இருந்ததில்லை
ஏழு வயதில்
தத்தனேரி சுடுகாட்டில்
அம்மாச்சியை எரித்துவிட்டுத்
திரும்பும்போது
கறுப்பாய், பம்புசெட் வழி
அறிமுகமானது ஆறு.
மதுரைக்குச் சாமான்கள் வாங்க
நெல்பேட்டைப் பட்டறைகளின்
இரும்புச் சத்தம் எதிர்க் கரையிலிருந்து
வரவேற்க ஆழ்வார்புரம் வழி
ஓபுலா படித்துறை ஏறுவாள்
தங்கபாப்பு அத்தை!
ஒரு வாரம் காய்ச்சலில் கிடந்தார்கள்
மல்லிகா சித்தியும் பிரபா சித்தியும்
கல்பனா தியேட்டருக்கு
குறுக்கு வழியில் போவோமென
கால் வழுக்கி நல்ல தண்ணீர்
ஊத்துக்குழியில் விழுந்து!
மடப்புரத்துக்கு
சாமி கும்பிடப் போனபோது
ஆற்று மணலின் சூடு பொறுக்காமல்
அழுத என்னைத்
தூக்கிக்கொண்டு ஓடியவள்
சுந்தரவள்ளி பெரியம்மா!
சின்ன அம்மாச்சி மகன்
நாகரத்தினம்
செத்துக்கிடந்தது
நடுத்திட்டு லிங்கத்தின் கீழே!
எட்டாவது பி செக்ஷன்
சூரிய நாராயணன்
சலவைத் துறையில்
மண்ணெண்ணெய் பாட்டிலை
தேடித் தேடி உடைப்பான்!
ராமேஸ்வரத்தில் பிடிபட்டவர்களை
ரகசியமாக இங்குவைத்தே எரித்தார்கள்!
அப்பாவைத் தகனம் செய்துவிட்டு
சத்குரு சங்கீதக் கல்லூரிக்கும்
டாஸ்மாக்குக்கும் இடையிலிருக்கும்
மாநகராட்சிக் குளியலறையில்
முடித்துக்கொண்டோம் காரியங்களை!
எக்காலத்திலும் எவருக்கும்
ஆறு ஆறாக இல்லை
தனக்கும்!
- சாம்ராஜ்
ஆதாரம்: சொல்வனம், ஆனந்த விகடன், 30.11.2011
குறிப்பு: வைகை ஆற்றின் நிலை பற்றிய கவிதை; மதுரையைச் சேர்ந்தவன் என்பதால் கவிதை பிடித்தது.