நினைத்தாலே கசக்கிறது
என்னைப் பெண் பார்த்துவிட்டுச் சென்றவர்கள் இரண்டு நாட்களில் தகவல் சொல்வதாகச் சொன்னார்கள்.
எனக்கு அப்பாவுக்கும் இரண்டு நாட்களும் இரண்டு யுகங்களாகக் கழிந்தது.
அம்மா எதைப் பற்றியும் கவலைப்படாமல் வழக்கம் போல வாய்க்கு வந்தபடி திட்டுவதும் நாள்தோறும் பார்க்கும் பதினைந்து தொலைக் காட்சித் தொடர்களைப் பார்த்துக்கொண்டே சமைப்பது, சாப்பிடுவது போன்ற வேலைகளைச் செய்வாள்.
மாப்பிள்ளை வந்து சென்ற மூன்றாவது நாளில் அப்பாவுக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தார்கள்: "உங்கள் மகளை எங்களுக்கு பிடித்திருக்கிறது. உங்கள் பக்கத்துத் தெருவில் உள்ள எங்கள் உறவினர் ஒருவர் சொன்ன தகவலின்படி நீங்கள் ரொம்ப நல்லவராம். ஆனால் உங்கள் மனைவி குடும்ப வாழ்க்கைக்கே தகுதியில்லாத வாயாடியாம். உங்கள் மகளை எங்கள் மருமகளாக்கி நாங்கள் அவமானப்பட விரும்பவில்லை".
இந்தக் குறுஞ்செய்தியைப் படித்ததும் அதிர்ச்சி அடைந்தார்.
நான் எதிர்பார்த்த தகவல்தான் இது. எனக்கு ஏமாற்றமில்லை.
முதன் முதலில் என்னைப் பெண் பார்க்க வந்தவர்களே முகத்தில் குத்தி விட்டார்கள்.
அம்மா கோபப்பட்டு, "அந்தக் கோணமூஞ்சிப் போனாப் போறாண்டி. வேற எவனாவது லட்சணமான நாய் வருவாண்டி"என்று சொல்லிவிட்டு வழக்கம் அவளது பொழுதுபோக்கு இன்பங்களில் ஈடுபட்டாள்.
எனக்கு நல்ல மண வாழ்க்கை அமையப் போவதில்லை என்பததை நான் உறுதி செய்துகொண்டேன்.
அன்பான கணவனையும் மகளையும் வெறுத்து தன் வாழ்க்கையையே நரகமாக்கிக் கொண்டவளால் எனது மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பற்றி எண்ணிப் பார்க்க முடியுமா?
அப்பாவுக்காக உயிர் வாழும் எனக்கு அம்மாவை வெறுத்துத் தற்கொலை செய்துகொள்ளவும முடியவில்லை.
அவளைப் படைத்த ஆண்டவனே வந்தாலும் அவளைத் திருத்த முடியாது.
அம்மாவைப் பற்றி எவ்வளோ சொல்லமுடியும். அதைச் சொல்வதே வெட்கக்கேடு
யார் மீதும் பாசமில்லாத அம்மா, அனைவரையும் அரவணத்துச் செல்லும் அப்பா. நான் அவர்களது ஒரே மகள். ஆரம்பப் பள்ளி ஆசிரியை.
அம்மாவுக்கு உடன் பிறந்தவர்களையும் பிடிக்காது. உறவினர்களையும வெறுப்பவள். வீட்டுக்கு யார் வந்தாலும் அடுத்தமுறை அவர்கள் வராத வகையில் நடந்து கொள்வாள்.
எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து அம்மா, குணமாகப் பேசமாட்டாள். அப்பாவையோ அக்கம் பக்கம் உள்ளவர்களையோ திட்டிக்கொண்டே இருப்பாள்.
அதனால் எங்கள் தெருவில் உள்ளவர்கள் எல்லாம் எங்களை ஒதுக்கப்பட்டவர்களாகத்தான் பார்க்கிறார்கள்.
அப்பா நல்லவராய் இருப்பதால் சண்டைக் கோழி அம்மாவை அவர்கள் பொறுத்துக் கொள்கிறார்கள்.
இந்தத் தொடர்கதை முடிவுக்கு வரும் நாளில் நானும் அப்பாவும் இவ்வுலகில் இருக்கமாட்டோம். அம்மாவை அனாதையாக்கி அவளை முழுப்பைத்தியமாக்க விரும்பாததால் நாங்கள் நடைபிணங்களாய் நாட்களைக் கடத்துகிறோம்.