முதல் காதலியும் முடிவில்லா தேடல்களும்

விடியல்கள் தோறும்
விழிகளை விரித்து
பயணிக்கும் பாதையெல்லாம்
தேடுகிறேன்...


அறிமுகம் இல்லா
ஆயிரம் முகங்கள்...
கண்டும் கடந்தும்...
காணும் மனிதரில்
நீ இல்லை...


தேடலில் தேய்ந்த கால்களும்
தேடிக்களைத்த கண்களுமாய்
தேடலை தொடர்கிறேன்.


தேடிப்பெறுகிற
தேடலில்லை
தேடலை விடவும் சம்மதமில்லை.


கண்வலை விரித்து
களைத்துபோனவன்...
கண்ணாடி திரைகளில்
மின்வலை விரித்து
தேடுகிறேன்...
மீண்டும் மீண்டும்...


இணையம் துழாவி,
'இனணயாது' போனவளின்
இன்முகம் தேடுகிறேன்...
காணும் முகங்களில்
காதலி நீ இல்லை...



இலைகளை பறித்து
கிளைகளை வெட்டி
முழுமரம் கழித்து
புதையுண்ட வேர்களாய்...
அரும்பவும் வழியின்றி
கருகவும் முடியா
அவஸ்தைகளாய்
நினைவுகள் எனக்குள்...


கோடுகளாய் எஞ்சி
மறைந்து போகிற 'முகத்தை'
இதயச் சுவடிகளில்
நினைவுத் தடங்களில்
"பிரதி" யாய்தேடி
மீட்டெடுக்கிறேன் மீண்டும் மீண்டும்...


நிலாவைத் தொலைத்த
நீண்ட இரவுகளாய்
நகரும் நாட்களில்
இருளின் கருமையில்
இறுகிய விழிகளில்
வெளிச்சம் ஒருமுறை
விதைத்து சென்றுவிடு...


காதலின் பிரிவில்
"காலதூரம்" கடந்தபின்னும்...
என்றேனும் ஓர்நாள்...
சற்றேனும் தொலைவில்...
உன் "கண்களை"
ஒருமுறையேனும்
காணும் கனவுகளுடன்
காத்திருக்கிறேன்...!

நிலாரவி.

எழுதியவர் : நிலாரவி (14-Oct-16, 8:36 pm)
பார்வை : 1219

மேலே