காதல் சுவடு
காதல் சுவடு
உனக்குன்னு பொறந்தவ
உன் அத்தை மகள்னு
உறவும் சொல்லிச்சு
ஊரும் சொல்லிச்சு
சட்டத்தில் இடமிருக்காம்
பெண்களுக்கு சொத்தில் பங்குண்டாம்
அது தெரிஞ்ச உன் அப்பன்
வழக்கு போட்டான்
என் அப்பன் நகை நட்டு கேட்க
அதோடு சேர்த்து பீரோ, கட்டில்
பாத்திரம் பண்டமுன்னு
ஊரே பார்க்க உன் அப்பன்
அனுப்பி வைச்சான்
வழக்கு நடந்தது
வாய்தா கேட்டு வாய்தா கேட்டு
பதினைந்து வருசமாச்சு
நீ
சடங்காகி சதைபோட்டு
மத மதன்னு வளர்ந்தப்ப
என் மனசு
தூண்டில் மீனாச்சு
நீ வாக்கப்பட்டு
வயலூருக்கு போன
சேதியும் வந்தி ச்சு
நான் கல்யாணம் செஞ்சு
காலமும் நகர்ந்தாச்சு
வக்கீலுக்கு பணம்
கொடுக்க முடியாம
பஞ்சாயத்தில் சுபமாய
முடிஞ்சிச்சு வழக்கு
உங்கப்பனும்
எங்க அப்பனும்
சேர்ந்து
குலாவுனாங்க
ஒரு மழைநாளில்
நாம் சந்திச்சபோது
நீ சொன்னாயே
முன்னமே புத்தியில்லாம
நம்ம காதல
இந்த முட்டாளுங்க
முறிச்சு போட்ட்டாங்களேன்னு
அப்போ உன் முகத்தில் வழிந்தது
மழை நீரா அது உன் கண்நீரான்னு
கலங்கிப்போனேன் நானும் .
1
MULLAI RAJAN KAVITHAIGAL - முல்லை ராஜன் கவிதைகள்