பிழைகள் ஆயிரம்
![](https://eluthu.com/images/loading.gif)
அடர்மழைக் காலம் தொடரும் புயல்சின்னம்
தொடர்வண்டிகூட தொலைந்துபோகும் வெள்ளப்பெருக்கு...
இருப்பதற்கு இடமின்றி பறப்பதற்கு துணிவுமிற்றி உண்ண இறையின்றி
நிலைநிற்க ஊன்றுகோல்தேடி உழைப்பெதுவென அதுவரையறியாத ஓரினம்...
வயல்வெளிப் பரப்புகளை ஆக்கிரமித்த வாகைக்காட்டு தோகைமயில் இன்று
துயில்மறந்து வெயில்காய்ந்து மங்கியநிலையில் மலையுச்சியில் மயங்கிக்கிடக்க...
கயலொன்றைக் கண்டால் கடுகளவாயினும் பசிதீருமென
கடும்பாறை மேலமர்ந்து மெல்லக் கண்திறந்து காண...
கடலாக மிதக்கும் வெள்ளத்தில் தத்தளிக்கும் கூரைகளெல்லாம்
மடலாக அனுப்பப்பட்ட வருணனின் வாய்மொழிகளே வசைகளாய்..
எழுத்துப்பிழைகள் எக்கச்சக்கமாய் எழுதப்பட்ட ஏழைக்குடிசைகளின் ஓலைகளை
வழுத்தோடிய பெரும்புனல் வழுக்குப் பாறையினோரம் சேர்த்துவிட...
ஓலைகளின் இடுக்குகளில் ஒளிந்துகொண்டு ஒட்டிக்கொண்ட அட்டைப்பூச்சி எட்டிப்பார்க்க
ஓடிப்பிழைக்க வழியற்ற தோகைமயிலுக்கு சிறுஉணவாய் அக்கணமே சிக்கிக்கொள்ள...
தற்காலிகமாய் பசியாறிய அந்தப்பிறவிக்கு அவ்விடத்தில்
பல்லாயிரக்கணக்கில் உயிர்களும் பயிர்களும் பலியாகிப்போனதனை அறிந்திடுமா...?