பல விகற்ப இன்னிசை வெண்பா தான்பெற்ற பிள்ளை உயிருக்கு ஆபத்து

பல விகற்ப இன்னிசை வெண்பா ..


தான்பெற்ற பிள்ளை உயிருக்கு ஆபத்து
என்றொன்று வந்துவிட்டால் தாய்தருவாள் தன்னுயிரை
என்றொருவன் சொல்கேட்டு மாமன் னனொருவன்
கூப்பிட்டான் மந்திரி யை

மன்னன் உரைக்கேட்டு மந்திரிம றுத்துரைக்க
மன்னன் சினமடைந்து. உண்மை நிலையுணர்த்த
தந்தேன் அவகாசம் ஓர்வாரம் என்றுரைக்க
சம்மதித்தார் மந்திரி யார்

போர்க்கால வேகத்தில் ஐந்தடிக் கைந்தடி
ஆழத்தில் நீர்த்தொட்டி ஒன்றமைத்து மந்திரியார்
நீரில்லாத் தொட்டியில் தின்பண்டம் வைத்ததற்குள்
மன்னரைய ழைத்துவந் தார்

மாமன்னன் முன்னிற்க மந்திரியார் தொட்டிக்குள்
தாய்க்குரங்கும் கூடவே பிள்ளைக் குரங்குகளும்
உள்ளிடவே தின்பண்டம் கண்டதும் மந்திகள்
உண்ணுமவ் வேளையி லே

தொட்டிக்குள் ஓரடி நீர்வரச் செய்திடவும்
குட்டிகளை தாய்க்குரங்கு தோள்மீது தூக்கிவைத்து
தொட்டிக்குள் சுற்றிவர மாமன்னன் மந்திரியை
நோக்கியே புன்னகைக் க

ஓரடிநீர் மேலும் அதிகரித்த வேளையிலே
குட்டிகளை தோள்சுமந்த தாய்க்குரங்கின் மூக்குவரை
நீர்வரத்து வந்தவுடன் பிள்ளைகளை வீசிவிட்டு
தாய்க்குரங்கு தப்பிய தே

23-10-2016

எழுதியவர் : (23-Oct-16, 3:05 pm)
பார்வை : 88

மேலே