அம்மாவுக்கு

அம்மாவுக்கு.....!

எட்டனா நாலனா காசயெல்லாம்
ஒட்டு போட்ட சேல
முந்தானையில் முடிஞ்சிருந்து
பள்ளி கூடம் போகையில
பாக்கெட்டுல போட்டு விட்டு
பாசத்தோட நெத்தியில
ஒத்த முத்தம் வைப்பியே
இப்போ நெனச்சாலும்
இதமா இருக்கு...!

ஆத்தா
அந்தி மசங்குனப்புறம்
அங்க இங்க போகாதடா
எல்ல முனி
எழுந்து வந்து அடிச்சிடுமுன்னு
நீ சொல்ல
நான் மெல்ல மெல்ல
ஓடி வந்து
ஆடி மாசத்து காத்துல
ஒடிஞ்சி விழும் வாழப் போல
உம் மடியில விழுவேனே....
வயசான பின்னும் போகலத்தா
அந்த கிறுக்கு...!

கால் படி கம்பு போட்டு
கணக்கா சோறாக்கி
கடனா கால் லிட்டர்
எரும தயிர் வாங்கி
எதமா கஞ்சி கரைச்சு
வெள்ளாளங்காட்டுக்கு
வேலைக்கு போனப்போ
பறிச்சு வந்த
பச்ச மொளகாய
எதமா பதமா
எண்ணெ(ய்) விட்டு வறுத்து கொடுப்பியே
அந்த ருசிக்கு முன்ன
பச்சரிசி சோறும்
பழைய சரக்கு
ஆத்தா பழைய சரக்கு.....!

காசு சம்பாதிக்க
காடு கழனி
வூடு உன்னை எல்லாம் பிரிஞ்சு
கண் காணா தேசத்துல
ஆருமில்லாத அநாத போல
வாழுறத நெனச்சா
கனமா இருக்கு
நெஞ்சு கனமா இருக்கு....!

எழுதியவர் : புதினக்கவி (24-Oct-16, 1:03 pm)
Tanglish : ammavuku
பார்வை : 229

மேலே