திருவரங்க தேவதை - 5

🌺திருவரங்க தேவதை -5🌺

கார்த்திக்கும் மதனும் நண்பர்கள், கார்த்திக் ஒரு பெண் மீது காதல்வயப்பட்டு அவளின் பார்வைக்காக தொடர்ந்து செல்கிறான்.இன்று அவளின் பெயரைக்கேட்க முற்படுகிறான்.
இனி,

கண்தெரியாமல் அலைந்தவனுக்கு அழகோவியத்தை உணரும் சக்தி கிடைத்த மகிழ்ச்சிப்போல், கார்த்திக்கின் உடல்முழுதும் காதல் உணர்ச்சிகள் கட்டுபாடின்றி சுழன்று கொண்டிருந்தது.இன்று மாலை அவளை பார்க்கும்பொழுது எப்படியாவது அவளின் பெயரை கேட்டுவிட வேண்டுமென்று முடிவாய் இருந்தான்.காலையின்அவள் பார்வையின் விழி சுகத்தால் கரையேராக்கட்டுமரம்போல் இன்னும் மிதந்து கொண்டிருந்தான்.இது வரை அவள் கார்த்திக்கை பார்த்தது,அவளை பின்தொடர்ந்தது ஆகிய காட்சிகளை ஒருமுறை மனதுக்குள் ஓட்டிப்பார்த்தான். கல்லூரிக்கு சென்றாலும் மாலை நேரத்திற்காக அவன் மனம் ஏங்கியது.ரோசாப்பூக்கள் வண்ணத்துபூச்சிகளுக்கு வர்ணம் பூசி மேகங்களை அலங்கரிக்க அனுப்பியது போலும், மாலை தீண்டிய மேகங்கள் காதல் மொட்டுக்குளுடன் காத்திருந்தது, கார்த்திக்கின் காதலை அவளிடம் மொழிப்பெயர்க்கும் திறனை வெளிப்படுத்துவதற்கு, மேலும்
அவளை சுற்றிய எண்ணங்கள் அவனின் எதிர்ப்பார்ப்புகளை காதல்முடிச்சுகளால் கட்டி இறுக்கம் கொண்டிருந்தது.இன்று கார்த்திக் முதன்முதலாய் தனக்கு பிடித்த பெண்ணிடம் பேசப்போகிறான்.அவனுக்கு கருப்பு சட்டையென்றால் மிகவும் பிடிக்கும், கார்த்திக் சற்று மாநிறம், கம்பீரமான தோற்றம் மற்றும் அவன் கழுத்தின் அழகை காண வைக்க முத்தம் தரும் இரண்டுநாள் தாமரை மொட்டுப்போல் மச்சம்,ஆவல் சுமந்த முகத்தோடு காத்துக்கொண்டிருந்தான்.அவளின் சுவாசக்காற்று வருடி வருடி அவளின் வருகையை அறிவித்ததோ என்னவோ? அந்த அழகு நிலையத்தை கடந்துச்சென்றாள், அவளின் இருச்சக்கர வாகனத்தின் மணியோசை ஏதோ கார்த்திக்கிற்கு ஒரு வித தைரியத்தை தந்தது.பின் தொடர்ந்து ராஜகோபுரத்தின் அருகிலுள்ள ஒரு சிறு பல்பொருள் அங்காடி மையத்தில் அவள் நிற்கும்சமயத்தில் அருகில் நெருங்குகின்றான், எத்தனை உண்மை மனதை திருடியவளை, மிக அருகில் அதுவும் பேசமுற்படும்போது ஏற்படும் உணர்ச்சிகளின் முயற்சி மெளனம் என்றாலும், ஒரு கைப்பிடி இதயத்தில் ஆயிரம் இடிகள் தாக்கி வலிக்காமல் ஏற்படும் அதிர்வு போல் ஒரு சூழ்நிலை.அவளின் நேருக்கு நேர் விழிப்பார்வை ஒரு கனம் ஆனாலும் கார்த்திக்கின் உடல் முழுதும் ஒரு இறுக்கமான நெருடலை ஏற்படுத்தி, அவனின் மூச்சுக்காற்று நழுவிக்கொண்டு அவளின் கவனத்தை திருப்பியது.இதோ அவளின் முகம் காண்கிறான், கார்த்திக்கின் ஆயுட்காலத்தின் மொத்த ரசனையை மிஞ்சி மனதில் ஆழமாய் பதியப்பட்டுவிட்டது.இதை எத்தனை மொழிகளில் அந்த தருணத்தை எடுத்துரைத்தாலும் அவையனைத்தும் ஊமையாகித்தான் போயிருக்கும், இவர்களின் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தவே தமிழ் மொழி வரம் தந்து இருக்க வேண்டும். உலகத்தின் ஏதோ ஒரு முடுக்கில் காதல் சரித்திரம் தொடக்கத்தின் அறிகுறியாக கார்த்திக் மௌனம் கலைத்து, ஏதோ ஏதோ பேச எண்ணி கடைசியில் அவளின் கடைநிலைப்பார்வையை வென்று வினவியது அந்த வாக்கியம் மட்டுமே"உங்க பெயர் என்ன? ".அவளும் ஏன்? எதற்கென்று வினவாமல் பதிலுரைக்கிறாள்.அநேகமாக அந்த காந்த நொடியின் மயக்கத்திலோ அல்லது முன்ஜென்ம பந்தத்திலோ இருந்திருக்க வேண்டும்.அவளின் இதழ்தவழ்ந்து கார்த்திக்கின் காதினுள் அந்தப்பெயர் கொஞ்சி மகிழ்வித்தது "அன்புச்செல்வி ".இந்த பெயர்கேட்கத்தானே ஒருமாதக்காலமாய் மார்கழியின் குளிராய் படர்ந்துகிடந்தான்.
அன்புச்செல்வி வேறுஎதுவும் பேசமாலும் கேட்கமாலும் செல்கிறாள், ஒரு புதுவித முகமலர்ச்சியா அல்லது குழப்பத்தின் குறியா என்பது யாருக்கும் தெரியாது, அவளுக்கும் தான்.அடுத்த சந்திப்பின் உரையாடலை காதல் தேவன் தீர்மானிக்கட்டும், அதுவரை கார்த்திக், அன்புச்செல்வி இருவரின் சிறகுகள் கற்பனையில் காதல் பாடம் படிக்கட்டும்.

தொடரும்...
மருதுபாண்டியன். க

எழுதியவர் : மருதுபாண்டியன். க (24-Oct-16, 6:05 pm)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
பார்வை : 248

மேலே