வாழ்வில் ஆனந்தம் பகுதி - 1- தாத்தாக்களுக்கு சமர்ப்பணம்

வாழ்வில் ஆனந்தம் பகுதி - 1- தாத்தாக்களுக்கு சமர்ப்பணம்



முதுகினில் பேத்தியை ஏற்றியே மூட்டைபோல்

சுமந்தவளை ஓடுதல் ஆனந்தமே.

மடிதனிலி ருத்தியவள் மழலையைத் திருத்தியே

தமிழ்தனைக் கற்பித்தல் ஆனந்தமே.


கைவிரல் களைக்கோர்த்து கால்நடைப் பாதையில்

கூட்டியே செல்லுதல் ஆனந்தமே.

ஐவிரல் விரித்தவள்தன் கைகளை உயர்த்துகையில்

ஹய் பய்* அடித்தலும் ஆனந்தமே. * high five


துள்ளித் துள்ளியே முன்னால் அவள்ஓட

பின்னால்நான் ஓடுதல் ஆனந்தமே.

தள்ளுவண்டியி லவளை அமர்த்தியதன் பின்னாலே

தள்ளியே செல்லுதல் ஆனந்தமே.


சக்கர வண்டியில் அவள்செல்லப் பின்னாலே

மூச்சிரைத் தோடலோர் ஆனந்தமே.

பக்கத்திலே இருத்தி புத்தகங்கள் விரித்து

பல கதைகள் சொல்லுதல் ஆனந்தமே.


தொலைக் காட்சிபெட்டியில் பாட்டுகளைப் போட்டுப்பின்

கைகோர்த்து ஆடுதல் ஆனந்தமே.

வேலைகள் வேறின்றி அவளது குறும்புகளை

வார்த்தையி லேவடித்தல் ஆனந்தமே.


பூங்காவனம் சென்று ஊஞ்சலிலே அமர்த்தி

முன்பின் ஆட்டு்தல் ஆனந்தமே.

பாங்காகச் சருக்குமரப் படிகளில் ஏறிஅவள்

சருக்குதலை நோக்குதல் ஆனந்தமே .


மாதங்கள் மூன்றுமகன். மருமகள் பேத்தியுடன்

கழித்திட்ட நாள்முழுதும் ஆனந்தமே.

தேதிகள் கிழமைகள் வாரங்கள் தெரியாமல்

நேரங்கள் போனதே ஆனந்தமே.

எழுதியவர் : ரமேஷ் (கனித்தோட்டம்) (25-Oct-16, 7:58 pm)
பார்வை : 45

மேலே