நதிக்கரை ஞாபகங்கள்

நதிக்கரையோர வீடுதான் அன்று
குடிப்பது முதல் குளிப்பது வரை
நதி நீர் தான் வாழ்க்கை...

அழகிய மரங்களும் செடிகளும் நிறைந்த‌
சுத்தமான காற்றுவீசும் பசுமையான இடமது
பூக்களின் நறுமணமும்
சலசலக்கும் நதியின் ரீங்காரமும்
மயக்கம் கொடுக்கும்..

நதிக்கரை புளியமரத்தில் சேலை கட்டி ஆடியது
புளியங்காய் பறித்து உப்புவைத்து சாப்பிட்டது
அயிரை மீனைப் பிடித்து அண்ணனோடு சேர்ந்து
அடுப்பு மூட்டி வயிறு முட்டத் தின்றது
பௌர்ணமியில் நிலவின் அழகினை நதியில் கண்டு ரசித்தது
நேரம் போவதே அறியாமல் நீரில் ஆட்டம் போட்டது
அந்தி மாலை வீடு வந்து அம்மாவிடம் அடிவாங்கியது
நினைக்க நினைக்க நெஞ்சம் அள்ளும் ஞாபகங்கள்....

இன்றோ அத்தனையும் மறந்து
காற்றை நீரை காசு கொடுத்து வாங்கி
நதியைக் கெடுத்ததைப் போல‌
நம்மை நாமே கெடுத்துக் கொண்டுள்ளோம்...

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (26-Oct-16, 12:43 pm)
பார்வை : 109

மேலே