முகவரியற்ற தளத்துக்கொரு மடல்
ஜயீர் மாதங்கள் தொட்டுணர்த்தி
ஐநான்கு வருட அணை,ஆணைத்
தொடுதல்
அரிதான ஜயீர் வருடங்களில்
அன்பும் அரிதானதே என் தாயே .
அன்பு ஆயிரமாயிரமாய்
ஆர்ப்பரித்தாலும்
ஆற்றோழுக்கு போன்றவை தான்
நீயல்லா அவையனைத்தும்..
தெளிவால் தேம்பும் இந்நொடிகளில் ,
தெளிவல்லா உன்னொலித்
தாலாட்டால் தழுவிய
அத்தவ பொழுதுகளில் இன்றும்
தத்தித் தவிக்குதம்மா என் விழி
நாட்குறிப்பேடு..
கருவில் உன்முகம் பாராதவள் நான்,
ஆயினும் உன்னை அறியாலல்ல
அன்றே நான்,
உன் உணர்வுகளின் பரிணாமங்களில்
பரிந்துரைக்கப்பட்டவள் இவள் .
அப்பரிந்துணர்,பஞ்சணைக்கு இன்றும்
ஏங்குதம்மா என்னுள்ளம்..
நாளையான நாட்களில்
எனக்கான பொழுதுகளில்
நீ இல்லை - ஆயினும்
உன்னுள் உன்னால்
உருவானவள் இவள்
உனக்கானவளே என்றென்றும் ..
நிகரற்ற அன்பின் அழியா
மணிமகுடம் சுமப்பவளே!
என் இறுதி இருதயத் துடிப்பிலும்
செவிப்புலன் புலமையாக பிரித்து
கொடுக்கும் நீ விட்டுச் சென்ற,
எனக்கான உன் வார்த்தைகளை
அன்றும் பசுமையாக..
எதிர் காலங்களில் உன்னைச்
சந்திக்கும் சந்தர்ப்பம் ஒன்றிருப்பின்,
ஒன்றன் பின் ஒன்றாக நீ எனக்காய்
உதிர்த்த வார்த்தைகளை
உனக்காய் ஒப்புவிப்பேன் - அன்று
"என் வார்த்தைகளை ஒருபோதும்
நீ மறவாதே" என்று நீ உரைத்ததைக் கூட
நான் மறக்க மறந்தேன் என்பதை
நீ அறிவாய் என் தாயே ..