தீப ஒளித் திருநாள் வாழ்த்து

இரட்டைச் சமநிலைச் சிந்து

தீபவொளித் திருநாள் - செல்லமே
. தீபவொளித் திருநாள் !
ஆபத்து நீங்கிடவே - அருளொளி
. ஆண்டிருக்கு மொருநாள் !

புத்துடை யோடணிகள் - புதுவண்ணம்
. பூணும் வகைத்துணிகள் !
சத்துடை நல்மருந்துஞ் - சமைத்திடுஞ்
. சங்கத் தமிழ்விருந்தும் !
அத்தனை யின்புறவே - அழகுடன்
. அன்பர்கள் சூழ்ந்திடவே
இத்தரை மக்களெலாம் - இன்பமதை
. ஈணும் வகைத்திருநாள் ! ....................(தீபவொளித் திருநாள்)

யாவருங் கூடிடவே - மதியத்தில்
. யாழிசை பாடிடவே
நோவுத லேதுமின்றி - இனிப்புகள்
. நூதன மாக்கிடவே !
மேவிடுங் காரவகை - இன்னும்பல
. மேன்மை சமைத்திடவே
தாவிடு மன்புடனே - தீபவொளி
. தன்னையுங் கண்டிடுவாய் ! .......(தீபவொளித் திருநாள்)

உள்ளி னழுக்குகளு - மறிவற்ற
. ஊறுடை எண்ணங்களும்
பள்ளத்திடை வெள்ளம் - போலவொளி
. பாய மறையுமென்ற
விள்ளுங் கருத்தினையே - திறம்பட
. விரித்துச் சொல்லுகின்ற
கொள்ளை யெழிற்றிருநாள் - நல்லமதி
. கொண்டுகொண் டாடிடுவாய் ! .............(தீபவொளித் திருநாள்)

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (28-Oct-16, 7:40 pm)
பார்வை : 164

மேலே