கந்தர் அனுபூதி - 2 ஞானாகரனே நவிலத்தகுமோ
அன்பர்களுக்கு வணக்கம்,
ஆனா அமுதே அயில்வே லரசே
ஞானா கரனே நவிலத் தகுமோ
யானாகிய வென்னை விழுங்கி வெறுந்
தானாய் நிலைநின் றதுதற் பரவே. கந்தர் அநுபூதி 28 (அருணகிரிநாதர்)
ஞானாகரன் என அருணகிரியார் முருகப்பெருமானை விளிக்கிறார். கருணாகரன் - கருணையே வடிவானவன், அதை போல ஞானாகரன் என்பவன் ஞானத்தின் வடிவெனலாம். இப்பதிகத்தில் அருணகிரியார் முருகப்பெருமானிடம், "ஞானமே வடிவானவனே" என விளித்து தற்பரத்தின் தன்மையினை விளக்குகிறார். அதற்கு முன்பு, ஞானாகரன் எனும் சொல் அழகும் பொருளும் ஒருசேரப் பொதிந்ததாக உள்ளது சிறப்பு. முருகப்பெருமானின் வடிவம் என்னவென்றால் ஞானம். ஞானம் பார்க்கவொண்ணாதது அனால் உணரக்கூடியது. மனிதனுக்கு மூன்று அந்தகரணங்கள் உள்ளன அவைகள் மனம், சித்தம்,புத்தி. இவை மூன்றுமே கண்களால் காண முடியாதது ஆனால் உணரக்கூடியது. இறைவன் மூன்றையும் கடந்து விளங்குபவன். நம் உடலில் ஒவ்வொரு ஆதார சக்கரங்களையும் நம் ஜீவாதார சக்தியான குண்டலினி கடக்க கடக்க ஒவ்வொரு அந்தகரணத்தையும் நம் ஆன்மா கடக்கிறது. ஆக்ஞா என்னும் ஆதார சக்கரத்தினை கடக்கும் போது புத்தி எனும் அந்தகரணம் கடக்கபட்டு சகஸ்ராரம் அடையப்படும் போது ஞானம் கிட்டுவதாக யோக நூல்கள் சொல்கின்றன. இங்கே இறைவன் அந்தகரணங்களையும் கடந்த நிலையினையே ஞானாகரன் என சுட்டுகிறார் அருணகிரியார். அப்படிப்பட்ட ஞானாகரனிடம் தற்பரத்தின் இயல்பினை விளக்கசொல்வது சொல்வது அறிவின் உச்சம். "யானாகிய என்னை விழுங்கு வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே" எனும் வரிகள் ஞானத்தின் உச்சம்.தற்பரம் எனும் சொல் மிகுந்த தத்துவார்த்தமானது. தன் + பரம், தற்பரமானது, தன் + பெருமை தற்பெருமை என்றாவது போல தற்பரமும் ஆனது. பெருமை என்பது ஒருவரை அல்லது ஒரு விடயத்தினைப் பற்றிய உயர்வான எண்ணம். தற்பெருமை என்பது இந்த எண்ணத்துடன் அகங்காரம் சேர்ந்துவிட்டால் அது தற்பெருமையாகிறது. பெருமை பேருடைத்து அனால் தற்பெருமை என்பது அகங்காரத்தின் கலவையாதலால் அது அழிவிற்கான ஒரு பொருளாகிறது. பரம் என்பது இறைவன். எந்த ஒரு தன்மையுமற்ற, செயலுமற்ற சுத்த நிர்குணமுடைய பரம்பொருளாகும். இதனை லலிதா சஹஸ்ரநாமம் "நிர்குணா" என விளிக்கிறது. அப்படிப்பட்ட எந்த தன்மையுமற்ற பரம்பொருள், தானாக எந்த செயலும் செய்யாதது. ஆதியில் உலகம் தோன்றிடும் முன்பு, ப்ரம்மம் ஏதுமற்று, செயலற்று பரமாக இருந்தது. இந்த சுத்த பரமானது ஏதும் செய்யவொண்ணாதது, எந்நேரமும் பேரின்பத்திலேயே பெரிதும் திளைத்து இடையறாது மோனநிலையினின்று இருப்பது. இந்த பரம் இவ்வுலகினை இயக்கும் திருவுளம் கொண்ட போது தான் எனும் தன்மை பெற்று பின்னரே அது தன்னிலிருந்து பல்வேறு விக்ருதிகளை (பல தேவர்களையும், தேவதைகளையும்) பிரமன் முதலாய படைத்தல், காத்தல், அழித்தல் செய்யும் தெய்வங்களும் தன்பாற் உண்டாக்கியது. தான் எனும் இயல்பு சேர்ந்து, தற்பரமாகிறது. அப்படிப்பட்ட பரம், தான் எனும் தன்மை பெற்று தற்பரமாகி இவ்வுலகினை இயக்குகிறது. யான் என்பது அகங்கார நிலை, ஒரு ஞானி என்பவர் அகங்கார நிலையினை விட்டவராவர். அந்த அகங்காரம் எப்படி அழிக்கபடுகிறது என்றால் அதைவிட பெரிய அகங்காரம் ஒன்றால் விழுங்கப்படவேண்டும். அப்படியான தற்பரம் விழுங்கும் பொது, இந்த சிறிய "நான்" அந்த பெரிய நானான தற்பரத்திடம் ஒன்றாகி கலந்துவிடுகிறது. ஒரு சூரிய ஒளி முன்பு அகல்விளக்கு தன் ஒளியினை இழந்து நிற்பது இங்கே உவமையாகக் கொள்ளலாம். இறுதியில் அந்த தற்பரமே நிலையாகிவிடுகிறது. இந்த பதிகத்தின் பொருளாவது அழியாத அமுதே, ஞானமாகிய வடிவினை உடையவனே, சொல்லுவாயாக, தான் எனும் என்னை விழுங்கி, தான் அதுவாகி அந்த தற்பரம் நிற்கிறது இந்த நிலையினை நவில்வாயாக என்கிறார் அருணகிரிநாதர். - இவண் சௌந்தர்