சிவக்கொழுந்து
![](https://eluthu.com/images/loading.gif)
ஓவியர் கவிஞர் சு. ரவி அவர்களது முருகன் படம் ஒன்றைக் கண்டேன். மனத்திற்குள் ஊற்றாய்ப் பொங்கியெழுந்த வரிகளைக் கவியாக்கி வடித்தேன். பிழையிருப்பின் சுட்டித் திருத்த உதவுக....
-குழிப்பு-
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன - தனதானா
-பாடல்-
விரித்த பன்னிரு புயமொடு விரிநுதல்
அணித்த குங்கும வழகுடை முருகனை
விளித்த வன்றனை யழகனை அனுதின -மடைவேனே !
வியப்பு தந்திடு மவனொளி மயிலறு
முகத்தி ருந்திடு மெழில்விழி களிலொரு
விழிக்க வன்துதி புரிமன துடையவன் - தெரியேனோ ?
தரித்த பொன்னொளி திகழுடை யழகினி
லமைச்ச தங்கையி லெழிலுடன் வருமொலி !
தமிழ்க்க டம்பனின் நினைவதி லுறுதலு – மரிதாமோ ?
தவத்து றுஞ்செய லதுபுரி முனிவரை
அணைத்து நெஞ்சொடு புதுவர மதையளி
தகத்த கென்றொளி கமழுட லழகனை – நினைவேனே !
வருத்து மின்னலும் முருகனி னயிலடி
விடுக்கு மின்னொலி தனிலெனை விலகிடும்
வனப்பு கொஞ்சிடு திருவடி புகழுவன் – பிணிவாரா !
வறுத்தி ருந்திடு சபலமு மதனொடு
சினக்க வந்திடு மறிவிலி செயலதும்
வலுத்த செந்திலின் வளைகர மதைகொள – அணையாதே !
சிரித்த மெல்லிதழ் சிவகுரு வெனவறி
வுரித்த சிந்தையு மயிலொடு கொடியொடு
சிறக்க நின்றிடு மயிலொடு திகழெழில் – முருகோனே
சிறுத்த சிந்தையு முடையவ னெனையுன
தருட்க லம்பக விழிதனி லருளிடு
சிவக்கொ ழுந்துன தடிமல ரெனவருள் – பெருமாளே !
-விவேக்பாரதி