உமையாள் திருப்புகழ்

வண்ணப்பா

-குழிப்பு-

தனத்த தந்தன தானன தானன
தனத்த தந்தன தானன தானன
தனத்த தந்தன தானன தானன - தனதானா

-பாடல்-

நினைத்தொ டர்ந்திடு தீவினை யோடிட
நினக்கு ளந்தனில் நீதியு மேயுற
நிசத்தி ருந்திட நீணில மீதறி – வுயர்வோடே

நிறைத்த நன்னெறி யோடுற வாடிட
நினைத்த சிந்தையி லேதின மேயுற
நிகழ்த்து மம்பிகை யாளடி மேவுதல் – புரிவாயே !

வனத்தி லன்றொரு தாருக னாடிட
வரத்தி லங்கிற வாவர மேயவன்
வசத்தி ருந்திட மூவுல கேகொள – வருபோதே

வரத்து றும்விதி யாலர னாரவர்
வடித்த ருந்திய தீவிட மேவுரு
வெடுத்தெ ழுந்தனள் ! தாருக னாருட - லழியாதோ !

மனத்தெ ழும்பகை மாயவு மாரையும்
மதிக்கு மந்நிலை தானுட னாகவும்
மதிக்கு ளிங்ஙன மேயறி வூறவும் – மலைபோலே

மகிழ்ச்சி வந்துடன் சேரவு மூறுறு
மகற்கு வந்தரு ளேபொழி தாயெனும்
மணிக்கொ ழுந்தவ ளேசர ணாகதி – தொழுவாயே !

உனைத்தொ டர்ந்திடு மூவினை காளியின்
உயர்த்த டந்தனில் வீழவு மேகிடும்
உயிர்ப்ப தங்களி லேநட மேயுறு – சிவனோடே

உடைச்ச தங்கையு மாடிட வேயிடை
உலுக்கி வந்தவ ளாடிட வேயெழில்
உருத்தெ ழுந்திடும் ! ஊசியி லேதிகழ் – உமையாளே !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (5-Nov-16, 12:29 am)
பார்வை : 84

மேலே