கவிதை செய்வேன் கேளீர் - ஆசிரிய விருத்தம்

எண்ணம் என்னும் ஊரினிலே எழுத்து என்னும் தேரினிலே
வண்ண வண்ண நிறம்காட்டி வான வில்லின் கரம்போல
அள்ளி அள்ளி சொல்லெடுத்து அழகாய் தமிழில் அதைசேர்த்து
சின்னச் சின்னக் கவிதைகளை சேர்த்து வைத்து எழுதுகிறேன்

தெள்ளத் தெளிய தமிழமுதை தேர்ந்து தெளிந்த கருத்ததனை
உள்ளம் கடக்கும் சொற்கொண்டு உணர்வு பூக்கும் பொருள்கொண்டு
சொல்லச் சொல்லச் சொக்கவைக்கும் கவிதை என்னும் காவிரியில்
வெள்ளம் வெள்ளம் எனும்போல அள்ளும் கவிதை அதைப்பாராய்

கன்னல் மொழியாம் தீந்தமிழே கருதக் கருதக் கவிபெருகும்
மின்னல் ஒளிபோல் ஒருகவிதை மிகவும் விரைவாய் உருவாகும்
பின்னல் சடையாய் சொற்களெல்லாம் அருகே வந்தே அசைந்தாடும்
முன்னம் என்னுள் எழுந்தபொருள் முழுதாய் இங்கே அரங்கேறும் - சௌந்தர்

எழுதியவர் : சௌந்தர் (16-Nov-16, 2:05 pm)
சேர்த்தது : சௌந்தர்
பார்வை : 79

மேலே