தேர் வீதி
*தேர் வீதி*
நேற்றுதான் முடிந்தது போல் இருக்கிறது அதற்குள் வந்துவிட்டது இந்தாண்டு தேர்திருவிழா -என்ற பரபரப்பில் சுற்றமெலாம் சுழல.. கதிருக்கோ முடிந்தது ஆண்டல்ல யுகம் என்ற உணர்வு அமைதியைத்தர.. எதையும் வெளிக் காட்டாதவனாய்... சுழற்றாத பம்பரமாய் சுழன்ற அம்மாவின் கைவண்ணத்தில் அழகு கோலம் வாசலில் வரவேற்க.. விற்காத பலுன்களால் பலுன்காரன் கோலத்திற்கு வண்ணம் சேர்க்க.. வாங்காத மழலைகள் அவனைச் சுற்றி மகிழ்ந்தாட.. தேரோடும் வீதியெங்கும் மஞ்சள் மாவிலை தோரணங்கள் கமழ... பூச்சூடிய பூவையரின் புன்னகையோடு ஆடிக்காற்றும் அவனைச்சூழ தினமும் இருக்கும் இடமே என்றாலும் இன்று அது சொர்க்கமாய் தெரிய மகிழ்ந்து கொண்டு இருந்தான்.
அழையா விருந்தாளிகளாய் நட்புக்கூட்டம் அவனை சூழ்ந்து மகிழ்ச்சியைக் கூட்டிய நேரம்.. இனிதாய் கேட்க துவங்கிய மங்கள இசையின் திசையில் யானை, குதிரைகள் அணிவகுக்க.. பின்னால் நகர்ந்து வந்த தேரைக்காண பரபரப்பாய் முன்னால் நகர்ந்தது 'கதிர்'ஜ தாங்கிய சக்கர நாற்காலியோடு யுகம் காண காத்திருந்த ஆனந்த நொடிகளும் .
-மூர்த்தி