வங்கித் திருவிளையாடல்

கஸ்டமர்: இந்த ஆள் கொண்டுவந்த செக்கிற்கு பணம் இல்லையென்று சொன்னவன் எவன்?

மேனேஜர்: அவன் இவனென்ற ஏகவசனம் வேண்டாம். அவையடக்கதுடன் கேட்டால் அதற்குத் தக்க பதில் கூறுவார்கள்.

கஸ்டமர்: அப்படியானால் மேனேஜரை விட மற்றவருக்கு இங்கு அதிகாரமோ?

மேனேஜர்: இது நார்மல் பேங்கிங் நாள் அன்று. ஸ்பெஷல் வர்கிங் டே. இன்று எல்லாருக்கும் சம உரிமை உண்டு.

கஸ்டமர்: அதனால்தான் இவன் கொண்டு வந்த செக்கிற்கு பணம் தரமாட்டோம் என்றீர்களோ?

கேஷியர்: ஆம். பழுதுள்ள செக் என்பதால் பணம் பெற அருகதையில்லை என்று கூறியவன் நான்தான்.

கஸ்டமர்: யார் இந்தப் பரட்டை?

மேனேஜர்: இந்தக் கிளையின் தலைமை கேஷியர் மிஸ்டர் பரட்டையார்.

கஸ்டமர்: ஆ! பரட்டை! கிளையின் காசாளர் என்ற ஆணவத்திலேதான் செக்கிலே குறை கண்டீரோ? என்ன குற்றம் கண்டீர்?

கேஷியர்: முதற்கண் செக்கில் கையெழுத்து இட்டது யார்? அதற்கு பதில் தேவை.

கஸ்டமர்: யாம்! யாம்! கையெழுத்திட்டோம்.

கேஷியர்: கையெழுத்திட நீர் வராமல் அதை இன்னொருவரிடம் கொடுத்து அனுப்பியதற்கு காரணம்?

கஸ்டமர்: அது நடந்து முடிந்த கதை. தொடங்கிய பிரச்சனைக்கு வாரும்.

கேஷியர்: கஸ்டமருக்கு முதலில் பொய்யுரை தேவையில்லை. அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

கஸ்டமர்: புரிந்தது புரியாதது தெரிந்தது தெரியாதது அனைத்தும் யாம் அறிவோம். அதுபற்றி உமது அட்வைஸ் நாட் நெஸஸரி. ஐ நோ எவ்ரிதிங்.

கேஷியர்: எல்லாம் தெரிந்துவிட்டால் செக்கில் பிழை இருக்காதென்று அர்த்தமா? அதுபற்றி நாம் குற்றம் கூறக்கூடாதா?

கஸ்டமர்: பரட்டை! என் செக்கில் குற்றம் கூறுகிறாராம்! கூறும். கூறும். கூறிப் பாரும்.

மேனேஜர்: சார்! சாந்தமாக பேசுங்கள். செக் பற்றிய டிஸ்கஷன் தேவைதான். ஆனால் அது சண்டையாக மாறிவிடக்கூடாது.

கஸ்டமர்: சண்டையும் சச்சரவும் பேங்கர் கஸ்டமர்களின் பரம்பரைச் சொத்து அதை மாற்ற யாராலும் இயலாது. சற்று பொறுத்திருந்து பாரும்! பரட்டையாரே எமது செக்கில் எங்கு குறை கண்டீர்? கையெழுத்திலா? இல்லை அமௌன்ட் இன் வர்ட்ஸிலா?

கேஷியர்: கையெழுத்தில் குற்றமில்லை. இருந்தாலும் மேனேஜ் பண்ணிக்கொள்ளலாம். எழுதிய அமௌன்ட்டில் தான் குற்றம் உள்ளது. எங்கே நீர் எழுதிய அமௌண்டை இன்னொரு முறை கூறும்.

கஸ்டமர்: ஹா! இரண்டு நான்கு ஸைபர் ஸைபர் ஸைபர்... இருபத்து நான்காயிரம்.

கேஷியர்: இதனால் நீர் சொல்ல வந்தது?

கஸ்டமர்: இதுகூடத் தெரியவில்லையா தலைமை கேஷியருக்கு? இட் மீன்ஸ் ஐ நீட் ட்வென்டி போர் தௌசன்ட் ருப்பீஸ்..

கேஷியர்: ஆனால் உங்கள் அக்கௌண்டில் இருந்து நீங்கள் ஏற்கனேவே ATM மூலம் 2500 எடுத்திருப்பதால் தற்போது 24000 ரூபாய்கள் தரவியலாது. இதுதான் எமது தீர்ப்பு.

கஸ்டமர்: குழந்தையின் ஸ்கூலுக்கு பீஸ் கட்ட வேண்டும் என்று வருபவனுக்கும் இதே தீர்ப்புதானா?

கேஷியர்: ஆமாம் இதே தீர்ப்புதான்.

கஸ்டமர்: உங்கள் சொந்தக்காரர் நண்பர்களுக்கு இதே தீர்ப்புத்தானா?

கேஷியர்: ஆமாம்.

கஸ்டமர்: உங்கள் பிராஞ்ச் மேனேஜருக்கு?

கேஷியர்: அவரென்ன, எங்கள் சென்னை மண்டலத்தை நிர்வகிக்கும் ஜெனெரல் மேனஜருக்கும் இதே பதில்தான்.

கஸ்டமர்: மிஸ்டர் பரட்டை! நன்றாகப் பாரும்! இந்த ID கார்டை பாரும்! இப்போதும் அதே பதில்தானா?

கேஷியர்: நீரே இந்த வங்கியின் புதிய சேர்மன் ஆகுக. IDயைக் காட்டினாலும் குற்றம் குற்றமே!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (20-Nov-16, 9:51 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 351

சிறந்த நகைச்சுவைகள்

மேலே