ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

கவலை இல்லை
பாராட்டைப் பற்றி
குயில் !

வருத்தமில்லை
கருமை பற்றி
காகம் !

கர்வம் இல்லை
வெண்மை பற்றி
புறா !

விடிந்து வெகுநேரமாகி
கூவியது
சோம்பேறி சேவல் !

வானில் வட்டமிடும்
பருந்து
பயத்தில் குஞ்சுகள் !

வெட்ட வெட்ட
உயர்ந்தது
தென்னை !

அறிந்ததில்லை
இளநீரின் சுவை
தென்னை !

இரண்டையும் காணலாம்
என்றாவது ஒருநாள்
சூரியன் சந்திரன் !

மீண்டும் துளிர்த்தது
பட்டமரம்
மழை !

வகைகள் எத்தனை
வரையறுக்க முடியாது
மலர்கள் !

ரொட்டி
யார் போட்டாலும்
வாலாட்டும் நாய் !

குறைக்கும் நாய்
கடிக்காது பொய்
கடிக்கும் !

திரைகடல் ஓடி
திரவியம் தேடினால்
சுடுகிறான் சிங்களன் !

வேற்றுமையில் ஒற்றுமை
இந்தியா மட்டுமல்ல
இணைகளும்தான் !

உள்ளே அனுமதி இல்லை
மதிப்பு உண்டு
காலணி !

வேண்டாம்
சூடம்
சுற்றுச்சூழல் மாசு !

பெயருக்கு இல்லாமல்
காரணப் பெயராகட்டும்
அறங்காவலர் !

அறம் செய்ய
விரும்பினால் போதாது
செய்க அறம் !

சொல் செயல் சிந்தனை
அறம் இருந்தால்
சிறக்கும் வாழ்க்கை !

குப்பை கூட
நிலத்திற்கு உரமாகும்
மனிதன் ?

மக்காத மக்கும் குப்பை
வேறுபாடு தெரியாத
மக்காக மக்கள் !

நோயின்றி
நலமாக வாழ
நடைப்பயிற்சி !
.
உலகில் யாருமில்லை
எல்லாம் பொருந்திய
இணை !

சாதியில் இல்லை
எண்ணத்தில் உள்ளது
உயர்வு தாழ்வு !

விட்டுக்கொடுங்கள்
ஒழியும் வன்முறை
நிலவும் அமைதி !

உடைத்தே போடுகின்றனர்
நடுத்தர மக்கள்
முந்திரி !

கடைசித் திருமணம்
உணர்த்தியது
கடலைமிட்டாய் !

உடைந்து இருந்தால் கோபம்
உடைத்து உண்ணும்
அப்பளம் !

பெண்ணிற்கு மட்டும்
கற்பிக்கப்பட்ட கற்பனை
கற்பு !

--

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (22-Nov-16, 2:35 pm)
பார்வை : 195

மேலே