பாலாமுரளி கிருஷ்ணா - பயணம்
பாலாமுரளி கிருஷ்ணா - பயணம்
உன்
நாத சங்கீத நர்த்தனங்கள்
எங்கள் காதுகளைக்
கௌரவப் படுத்தின.
எங்கள் மனங்களைத் திறந்த
உன் நாதவெளிப் பயணத்தில்
காற்றில் மிதந்து
ககன வெளிகளில் பயணித்தோம்.
கை தட்டமறக்க வைக்கும்
கான சிருங்காரம்,
உயிர் மெய்களில்
ஓடும் ரத்த ஒட்டமாயின.
நீ பாட்டுக்குப் போய்விட்டாய்.
உன் பாட்டு
காற்றின் சுவர்களைத் திறந்த
உன் குரல் விரல்
ஓயுமோ?
மாற்ற முடியாத
மரணவழிப் பயணத்தில்
உன் இடத்தை
யாருக்கேனும்
விட்டுக் கொடுத்திருக்கிறாயா?
எடுத்துக் கொண்டே
போய் விட்டாயா?
காலம் பதில்சொல்லும்.
காலந்தான்
இந்தக் காயத்துக்கும்
மருந்தாகப் போகிறது.