மருதாணி காதலித்தால்

மருதாணி காதல் கொண்டு
கவி படித்தால்
அனைவருக்கும் மெய்யில்
கை வைத்த இறைவன்
அவளுக்கு மட்டும் நெய்யில் கை படைத்தான்
உரலில் அரைத்தபோது
வலித்த என்னுடல்
களித்தது அவள்
விரலில் அணைத்தபோது
என் தாகத்தை
தண்ணீர் கொண்டு நனைத்தாள்
என் மோகத்தை
ஒத்தடம் தந்து அணைத்தாள்
என் உள்ளத்தை அவள்
உள்ளங் கையில் வைத்தாள்
என் உலகத்தை அவள்
முன்னங் கையில் தைத்தாள்
நான் அவள் கையை ருசிக்க
அவள் என் மெய்யை ரசித்துக்கொண்டிருந்தாள்
அவளின் ரேகையோடு
என் ரேகம் சங்கமித்தது
இரவு அவளோ உறக்கத்தில்
நான் மட்டும் கிறக்கத்தில்
இரவின் முடிவே
என் இறப்பின் முடிவானது
உறக்கம் கலைந்ததும்
என் உடலைக் கலைத்தாள்
என்னை கை கழுவினாள்
மகிழ்ச்சியோடு
சிவந்த நிறம் என் உதிரத்தின்
கவிதையெனத் தெரியாமல்
என் காதலினை அறியாமல் ...