சென்னையின் மழையும் மனிதமும்

நவம்பர் 23 , 2015
அலுவலக வேலையாக நெல்லூர் வரை சென்றிருந்தான் . வேலை எல்லாம் முடிந்து RTC பஸ்ஸில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து போனை துறந்து பார்த்தபோது ஆறரை மணி ஆகியிருந்தது. நெல்லூரிலிருந்து சென்னை 170KM. எப்படியும் மூன்றரை மணி நேரத்தில் சென்னை வந்தடைய முடியும்.நெல்லூரிலிருந்து பஸ் கிளம்பி 20 கிலோமீட்டர் வந்திருக்கும். நரேஷிடமிருந்து கால் வந்தது.
" சொல்லுங்க நரேஷ் "
" சென்னைல செம மழை டா. நீ நெல்லூர்லே தங்கிரு " என்று சொல்லி போனை வைத்தார்.
ஜன்னலுக்கு வெளியே சற்று எட்டி வானத்தை பார்த்தான் , மழை பெய்யும் நிலைமையில் மேகமூட்டம் இருந்தது. ஆனால் ஒரு துளி கூட மண்ணை வந்தடையவில்லை. சென்னையில் மழை என ஒன்று பெய்து விட்டால் OLA டாக்ஸி 3X இல் ஓடும் .ஒலிம்பியா டெக் பார்க் சந்தில் முழங்கால் அளவு தண்ணீர் வரும் ஊர் நெடுக்க ட்ராபிக்கில் வண்டிகள் நிற்கும். ஒரு வேலை நரேஷ் ஆஃபிஸில் இருந்திருக்க கூடும்.அது தான் அவர் அப்படி சொல்லியிருப்பார். ராஜ்குமார் அப்போது அண்ணா நகரில் எதோ ஒரு தெருவில் இருந்தார். வெங்கட் OMRல் இருந்தான்.
நேரம் ஏழு மணியை தாண்டியிருந்தது. சென்னை 144 கிலோமீட்டர் என்ற போர்டை பஸ் அப்போது கடந்தது. கோயம்பேடிலிருந்து ஆலந்தூர் 10 கிலோமீட்டர். சாதாரண நாட்களில் சென்றால் 35 நிமிடம் ஆகும். 12 நிமிடங்களில் கூட கோயம்பேடிலிருந்து வீட்டிற்கு சென்றிருக்கிறான் .அக்டோபர் 31 அன்று பெய்த மழையில் அவன் வீட்டிற்கு போக மூன்று மணி நேரம் ஆனது.எப்படியாவது 10 மணிக்குள் கோயம்பேடைஅடைந்து விட்டால் கடைசி மெட்ரோ ரயிலை பிடித்து விடலாம் என எண்ணினான். அன்றைக்கு ட்ரைவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை , ரெண்டு டீ பிரேக் மற்றும் ஒரு டின்னர் பிரேக் விட்டார்.பஸ் தடா பகுதியை தாண்டி வந்துகொண்டிருந்தது.மறுபடியும் போனை திறந்து பார்த்தான் . 15% பேட்டரி மீதமுள்ள நிலையில் அது அழ தொடங்கியிருந்தது. அப்படியே அணைத்து வைத்துவிட்டான் .செங்குன்றம் டோல்கேட் வரை மழை இல்லை. பஸ் கொஞ்சம் மெதுவாகவே சென்றிருந்தது. குளிரான காற்று மட்டும் வீசிக்கொண்டிருந்தது . புதிததாக திறக்கபட்டிருந்த திருமங்கலம் பாலத்தில் பத்து நிமிடமாக பஸ் நின்றது . பொறுமையை இழந்து போனை சுவிட்ச் ஆன் செய்தான் , அடுத்த நொடி ராஜ்குமாரிடமிருந்து கால் வந்தது
“ராஜ்குமார் எங்க இருக்கீங்க”
“CMBT பக்கத்துல டிராபிக்ல நிக்குறேன் . நீ ?”
“திருமங்கலம் பிரிட்ஜ்ல “
“எவ்வளவு நேரம் நிக்குறீங்க “
“ஒரு மணி நேரத்துல ஒரு சிக்னல் தாண்டி இருக்கேன்”
மறுபடியும் போனை அணைத்து விட்டான்
ஒரு சிலர் இறங்கி நடக்க தொடங்கினர் .கொஞ்சம் கொஞ்சமாக பஸ் நகர்ந்து CMBT வளைவுக்குள் பஸ் வருவதற்குள் மணி 12 ஆகிவிட்டது. “எல்லாரும் இங்கே இறங்கிருங்க” னு டிரைவர் அங்கிருந்து சத்தம் போட்டார்.
சீட்டுக்கு அடியில் காலை விட்டு ஷுவை எடுத்து கட்டிக்கொண்டு இறங்கினான். மழை சற்று குறைவாகவே இருந்தது. கையில் ஒரு பை தோளில் ஒரு பையை சுமந்து கொண்டு போலீஸ் பூத்துக்கு அருகிலிருந்த ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி நகர்ந்தான்.
ரோட்டை கடக்க முயன்றபோது இடது காலின் ஷு ஒரு சிறிய சகதிக்குள் மாட்டிக்கொண்டது .அந்த இடத்தில் குழி வர வாய்ப்பேயில்லை. சுற்றி பார்த்தான் . சாலையின் ஒரு ஓரத்தில் ஒரு கட்சியின் கொடிகள் சவுக்கு மரத்துடன் மண்ணோடு புடுங்கப்பட்டு அடுக்கபட்டிருந்தது . தூரத்தில் ஒரு பலகையில் " எங்களின் பொற்காலமே "என்ற போர்டு சாய்ந்து கிடந்தது.
சற்று தளர்வாக கட்டப்பட்டிருந்ததால் ஷுக்கு உள்ளேயும் சிறு கல்லும் சகதியும் பொய் விட்டது . ஆட்டோ ஸ்டாண்டில் யாருமில்லை . மார்க்கெட் செல்லும் வழியில் ஒரு ஆட்டோ நின்றது. ஆனால் ஆள் யாரும் இருக்கையில் இல்லை . அதை நோக்கி நகர்ந்தான் . ஆட்டோவின் பின்புறமாக என்ஜினின் கதவை டிரைவர் திறந்து கொண்டிருந்தார். ஒரு நாற்பது வயது இருக்கும். சிகரெட் ஒன்றை உள்ளங்கையால் மறைத்து மழையில் நனையாமல் உற்சாகமாய் புகைத்து கொண்டிருந்தார். ஏறக்குறைய முழுவதுமாக அவர் நனைந்திருந்தார்

“ஆலந்தூர் வரை வருமா”
பார்த்து விட்டு ஒன்றும் பேசாமலே தொடர்ந்து புகைத்தார்
“கத்திப்பாரா பக்கத்துல இருக்குல்ல ஆலந்தூர் “
“அதெல்லாம் எனக்கு தெரியும்..உனக்கு ஆட்டோ ஓட்ட தெரியுமா ??”
எதுவும் பேசாமல் நடக்க தொடங்கினான்
நில்லு. இப்போதைக்கு யாரும் வர மாட்டாங்க. நானும் பல்லாவரம் வரை போனும். மெயின் ரோட்ல வண்டி டிராபிக் ஜாம்ல ரெண்டு மணி நேரமா நிக்குது .போகணும்னா மார்க்கெட் வழியா சினமயா நகர் ரூட்ல தான் போகணும். அந்த வழியில போய்ட்டு வண்டி பாதியிலே நின்னுடுச்சி மறுபடியும் இங்கே தள்ளிட்டு வந்துட்டேன். அரை கிலோமீட்டர் தூரம் ரெண்டு feet தண்ணி நிக்குது. வா போலாம் வண்டி நின்னுடுச்சின்னா நா கொஞ்ச தூரம் தள்ளறேன் நீ கொஞ்சம் தூரம் தள்ளு.
இழுத்து புடித்து பேசி முன்னூறு ரூபாய்க்கு பேசி பயணத்தை தொடங்கினார்கள் .
என் பெரு ராஜா என பேச தொடங்கினார் .முதலில் இரண்டு பையையும் சீட்டின் பின்புறம் வைக்க சொன்னார்.ஆட்டோ ரோட்டின் நடுவுலே செல்ல தொடங்கியது.கொஞ்சம் தூரம் வரை தண்ணீர் உள்ளே வரவில்லை. அவன் ஷுவுக்குள் இருந்த குப்பையை எடுக்க இடது காலை ஆட்டோவுக்கு வெளிய நீட்டிகொண்டேய வந்தான். கொஞ்ச நேரம் நன்றாகவே இருந்தது. திடீரென நீரின் வேகம் அதிகரிக்க காலிலிருந்து அது பிச்சுக்கொண்டு எங்கயோ போய்விட்டது.
வெளிச்சம் ஏதும் இல்லாததால் தேடும் வழியில்லை. அதுவரை இதையெல்லாம் பொருட்படுத்தாமல் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தவர் திரும்பி
“என்ன ஆச்சு”
“ஷு தண்ணில போயிருச்சிண்ணா “
என்னப்பா நீ ?..
“இந்த இருட்டுல எங்க தேடறது ,கிடைக்காது, என்ன கலரு “
“பிரவுன் கலர் ணா”
வண்டியை அவர் கொஞ்சம் பின் எடுத்தார். சரி இனி கிடைக்காது என வண்டியை எடுத்தார் . ஆட்டோவின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் தொலைந்த ஷுவை அவர் கண்டுவிட்டார்
அங்க போகுது பாரு உன் ஷு "
ஆட்டோவை சற்று வேகமா நகர்த்தி ஷு பிடித்தார்.இதையும் சீட்டின் பின்புறம் போடு . ஆட்டோ தள்ளுவதற்கு இறங்கும்போது போட்டுக்கொள்ளலாம்
கொஞ்சம் செல்ல செல்ல ஆட்டோவுக்குள் தண்ணீர் வந்தது . என்ஜின் சத்தம் திணறி கொணடே மெதுவாக சென்றது.சாலையும் குண்டும் குழியுமாக இருந்தது. மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டிருந்தது. பெரிய அபார்ட்மெண்ட்களில் மட்டும் ஆங்காங்கே வெளிச்சம் தென்பட்டது. அவர்கள் செல்லும் வழியில் வேறு யாரும் வருவதாக தெரிவதில்லை. பின்னே ஒரு இரு சக்கர வாகனம் மட்டும் வந்தது. ரிலைன்ஸ் பிரெஷ் கடையை தாண்டி கொஞ்ச தூரத்தில் ஆட்டோ நின்றுபோனது.
இறங்கவா ?
ஒரு தடவ ஸ்டார்ட் பண்ணி பாப்போம் . ஒரு முறை , ரெண்டாவது முறை முன்றாவது முறை நான்காவது முறை இழுத்த பொது என்ஜின் ஸ்டார்ட் ஆகிருச்சு. எப்படியோ தத்தி தாவி ஆற்காட் சாலையை வந்தடைந்தோம் . அங்கேயும் தண்ணீர் இருந்தது.ஆனால் ஆட்டோவுக்குள் வரவில்லை
“சாப்பாடு எங்கயாவது கிடைக்குமா ?”
இப்போயெல்லாம் எங்கும் இருக்காது .. போற வழில இருந்தா நிப்பாட்டறேன் நானும் இன்னும் சாப்பிடல என்றார் .வடபழனி பேருந்து நிறுத்தம் போரம் மால் எல்லாம் வெறிச்சோடியிருந்தது
அசோக் நகருக்குளே எதோ சந்துக்குள் இருந்த கடையில் ரெண்டு தோசை மட்டும் வாங்கிக்கொண்டு மறுபடியும் கிண்டி நோக்கி வண்டி செல்ல தொடங்கியது . ராஜா மட்டும் பேசிகொண்டேய வந்தார் . இவன் அதை பொருட்படுத்துவதாக தெரியவில்லை . காசி தியேட்டர் அருகிலுள்ள பாலத்தின்மேல் வண்டி போய்க்கொண்டிருந்தது . ராஜா மறுபடியும் அவன்னபக்கம் திரும்பி
"நம்ம இந்த ஊர எவ்வளவோ அழ வச்சிட்டோம் அது திரும்ப ஒரு நாள் நம்மள அழ வைக்கும் பாரு "
வீட்டினுள் செல்லும்போது மணி 2 ஆகிருந்தது

ஒரு வாரம் கழித்து

ஒரு நாள் விடிய விடிய மழை பெய்தது சாயங்காலம் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இரவு பத்துமணி , கத்திபாராவின் ஒரு புறம் படகுகள் வைக்கப்பட்டிருந்தது. மெட்ரோ ரயிலின் பில்லாரோடு சேர்த்து கயிறு கட்டபட்டிருந்தது. அந்த கயிற்றை பற்றிக்கொண்டு மக்கள் பாலத்தின்மேல் வந்து கொண்டிருந்தனர்.அரை மணி நேரம் கழித்து அவனும் வெங்கட்டும் அடுத்த பக்கம் உள்ள லீ மெரிடியன் பக்கத்தில் சென்றனர். அடையாற்றிலுருந்து மோட்டார் சைக்கிளை தள்ளி கொண்டே சிலர் நடந்து வந்தனர். எவ்வளவு தண்ணீர் என்பதை அறிய கட்டையை பிடித்துக்கொண்டே கிண்டி ரயில்வே ஸ்டேஷன் நோக்கி நகர்ந்தான்.ஒரு இடத்தில இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் வந்தது. பின் நோக்கி நகர்ந்தான். தூரத்தில் ஒரு ஆட்டோ வேகமாக நீரில் இறங்கியது. பழத்தின் மேலிருந்த சிலர் வண்டி போகிறது என கூச்சலிட்டனர் . வேகமாக வந்த ஆட்டோ மழை நீரை வாரி இறைத்து அவனை முழுவதுமாக நனைத்தது .அவனுக்கு மனதில் ஏதும் ஓடவில்லை ஆட்டோவினுள் இருந்த டிரைவர் காய் நீட்டி எதோ சொன்னார்

ஆனால் இவனுக்கு

"நம்ம இந்த ஊர எவ்வளவோ அழ வச்சிட்டோம் அது திரும்ப ஒரு நாள் நம்மள அழ வைக்கும் பாரு "

என்ற ராஜாவின் குரல் மட்டும் திரும்ப திரும்ப ஒழித்தது

எழுதியவர் : கர்ணன் அண்ணாமலை (23-Nov-16, 7:36 pm)
சேர்த்தது : கர்ணன் அண்ணாமலை
பார்வை : 355

மேலே