குமுறி அழமுடியவில்லை எச்சில் இலை என் வாயில்
![](https://eluthu.com/images/loading.gif)
இதுவரை ஒன்றும் புரியவில்லை
முகவரி எதுவும் அறியவில்லை,
முத்தம் வாங்கியதா கன்னங்கள்
முட்காடுகளும் சொல்ல வில்லை.
தெருவோர நாய்களின் சங்கீதம்,
காதில் பாயும் தேனாக
காட்டு வெளி ஈக்களெல்லாம்
வாயில் அமரும் தேளாக
கருவறையில் சுமர்ந்த தாய்
கல்லறைக்கு செல்லும் முன்பு
சில்லறைக்குப் பெற்று என்னை
சாக்கடையில் போட்டாளா..?
கிணற்றில் வாழும் தவளையாய்
குப்பைத் தொட்டியில் என் வாழ்க்கை
குமுறி அழமுடியவில்லை
எச்சில் இலை என் வாயில்.
கண்கள் திறக்க முடிய வில்லை
உலகம் எதுவெனப் புரியவில்லை.
உயிரைக் கொண்டு வாழ்வதற்கு
உடம்பில் எனக்கும் தென்புமில்லை.
எறும்புக்கூட்டம் பாலுறுப்பில்
பருவம் பார்த்து மேய்கின்றது.
பாதி உயிர் என் உடம்பில்
பதுங்கிப் பதுங்கி வாழ்கின்றது.
இன்றோ நாளையோ ஆயுள்காலம்,
காய்ந்து போன வயிற்றுக்கு
உறவுகள் யாரென்று தெரியாமல்
வாழும் ஜீவன் நமக்கெதற்கு?
மாநகரக் குப்பை வண்டி
நாளையாவது வருமா? அறியவில்லை,
நான்கு மணி நேரம் தாங்காது,
உண்டு கொண்ட உணவுகள்.
இரக்கமில்லா மனித குலத்தில்
இறக்கி விட்ட இறைவா..!
ஈனப் பிறவி நானும்- உனக்கு
மறைமுக உறவா..?
மரணித்து வருகின்றேன் உன் பாதம்,
மகிழ்வாய் கொடுத்து விடு இன்றே சாபம்.