ஏழைத்தாய்
சுத்தமான வேலைக்காரி. . .
✍🏼மருதுபாண்டியன்.க
நல்ல
சுத்தக்காரியாம்
ஒரு மணி
நேரத்திற்கு ஒருமுறை
பாத்திரங்கள்
துலக்கிறாள் . . .
பனிரெண்டு
வீட்டிலும் சுத்தமான
வேலைக்காரியாம். . .
தனக்கு
தலைவலி
வரும்போதெல்லாம்
அடிக்கடி காபி
கொடுக்கிறாள்
வீட்டின்
எஜமானிக்கு. . .
அந்த
காபி வாசனையில்
பசியாருகிறது
அவளின்
தலைவலி. . .
என்றோ
எண்ணினாள்
அந்த
எஜமானியின்
கத்தரிப்பூ
புடவை போல்
வாங்கவேண்டுமென்று . . .
மூன்று
வருடங்கள் கழித்து
எதிர்பாராத
பரிசாய் கிடைக்கிறது
எஜமானியிடமிருந்து
கத்தரிப்பூ புடவை
பழையதாய் . . . .
பத்து ரூபாய்
கீரைக்கட்டு
எட்டு ரூபாய்
பேரத்தில் முடிகிறது . . .
ஏழை வியாபாரியின்
இரக்கமும்
ஏழை தாயின்
சிக்கனமும். . . .
அவள்
சேமித்த
பால்
பைகளின்
கையிருப்பில் . . .
தன் மகனின்
மாதாந்திர
ரயில்
பயணச்சீட்டு
காத்திருக்கிறது . . . .
அவள்
சிக்கனமும்
உழைப்பும்
மொத்தமாக அடகு
வைக்கப்படுகிறது. . .
தன்
மகனின் கல்லூரி
படிப்பிற்கு . .
மதுபான
சொகுசு அரங்கில்
நண்பர்களின்
மதுபான பந்தியில்
விரதம்
கொள்கிறான் . . .
தன்
ஏழைத்தாயின்
பல வருட
தவத்திற்காக
அதே அரங்கில்
பகுதிநேர
பணியாளனாக. . . .
அவளின்
மொத்த உழைப்பும்
சிக்கனமும் மீட்கப்பட்டு
ஏனோ
தன் மகனுடன்
ஏலம் விடப்படுகிறது
தன் மகனின்
திருமணத்தில். . . .
புதுமண தம்பதியினர்
தாயின்பெயரில்
பெருந்தன்மை . . .
முதியோர் இல்லத்தில்
நன்கொடையாக
இல்லாமல்
வாடகையாய்!
ஏழைத்தாயோ
பரிசளிக்கிறாள்
மாதாந்திர திட்டத்தில்
முதிர்ச்சி
அடைந்த வீட்டு
பத்திரத்தை. . . .
அதில்
ஒரு அறையில்
தொட்டில் கட்டி
சாவி மட்டும்
தாயின்
கையில். . .
தன் மகன்
நிம்மதியடைகிறான்
குழந்தை பிறந்தால்
பார்த்துக்கொள்ள
அம்மா வருவாளென்று. . .
தன்
மகனின் நிம்மதி
முகம் கண்டு
பயணிக்கிறாள்
முதியோர்
இல்லத்திற்கு. . . .
வாடகை விருந்தாளியாக
அல்ல. . .
மீண்டும்
சுத்தமான
வேலைக்காரியாக. . . . .