கறுப்புப்பணம் - ஒரு சிந்துபாத் கதை போல

ஒரு ஆப்பிரிக்க தேசம். பல ஆண்டுகளாகக் கடும் வறுமையிலும், அடக்கு முறைகளாலும், நெருக்கடிகளாலும், அரசியல் நிச்சயமின்மையாலும், பற்பல வன்முறை மற்றும் பெருகும் குற்றங்களாலும் பெரும் பாதிப்படைந்து, மக்களெல்லாம் மிகவும் நொந்து தளர்ந்து போன நிலையில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய அரசில் முக்கிய அதிகாரத்துக்கு வந்த ஒரு அரசியல்வாதி அந்த மாற்றத்தில் ஒரு முக்கிய பங்காற்றினான்.

தன்னுடைய நீண்ட கால அரசியல் வாழ்க்கையில் உண்மைக்காகவும், மிகக் கண்டிப்பான நேர்மைக்காகவும் மக்களிடம் மிகவும் நல்ல பெயரும் செல்வாக்கும் பெற்ற அவன், இனி ஒரு புதிய விடிதல் அத்தேசத்தில் அவனால்தான் வரும் எனும், நம்பிக்கையையும் மக்களிடையே பெற்றிருந்தான்.

அவன் சார்ந்த கட்சி ஆட்சிக்கு வருமுன் செய்த பிரச்சாரங்களில், அதற்குமுன் ஆண்ட அரசியல் பிரமுகர்களெல்லாம் எந்த அளவுக்கு ஊழல் செய்தார்கள், எந்த அளவுக்கு மக்களை சுரண்டியும், கோடிகோடிக் கணக்கில் கொள்ளையடித்தும் அந்தப் பணத்தையெல்லாம் ஸ்விஸ் வங்கிகளில் எவ்வாறு பதுக்கிக் கொண்டார்கள் என்பதையெல்லாம் விலாவரியாகப் பட்டியலிட்டு மக்கள் முன் காட்டினான்.

தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயமாக அந்தத் தேசத் துரோகிகளின் முகத்திரையைக் கிழித்து அவர்கள் பதுக்கிய பணத்தை மீட்டுக் கொண்டு வருவோம் என்று சூளுரைத்து, உறுதியளித்திருந்தான்.

சொன்னது போலவே ஆட்சிக்கு வந்ததும் இரண்டு மாதங்களுக்குள் முதல் காரியமாக ஒரு தீர்மானமான முடிவுடன் ஸ்விட்ஸர்லாந்திற்குப் பயணமானான். தன் கைப்புத்தகத்தைப் பார்த்து, அதில் குறித்து வைத்திருந்த ஒரு வங்கிக்கு நேராகச் சென்றான். பல அடுக்குகளைத் தாண்டி இறுதியில் அந்த வங்கியின் பிரதான நிர்வாகியான ‘மேனேஜரை’த் தனிமையில் சந்தித்தான். தன்னை இன்னாரென்று அறிமுகப் படுத்திக் கொண்டு, தன் தேசத்தைப் பற்றியும் ஊழல்களைப் பற்றியும் நீண்டு விவரமாக எடுத்துரைத்தான்.

அதில் சம்பந்தப் பட்டவர்களில் பலர் அந்த வங்கியில்தான் கணக்கு வைத்திருப்பதாகத் தனக்கு மிகவும் நம்பிக்கையான தொடர்பு களின் மூலம் தெரிந்து கொண்டிருப்பதாகவும், அத்தகைய கணக்குகளின் முழு விவரங்களைத் தனக்கு அளித்து, சட்டத்தின் முன் அவர்களை நிறுத்தத் தனக்கு உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டான்.

இவன் சொன்னது அனைத்தையும் மிகவும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த அந்த ‘மேனேஜர்’ இவன் பேசி முடித்தவுடன் கொஞ்சம் அமைதியாக இருந்தான். பின்பு, ‘மன்னிக்கவும், நீங்கள் சொன்னபடி உங்கள் தேசத்து பிரமுகர்கள் ஒருவேளை எங்கள் வங்கியில் கணக்கு வைத்திருக்கலாம், அல்லது அவ்வாறான கணக்குகள் எதுவும் இல்லாமலும் இருக்கலாம், ஆனாலும், எங்கள் நாட்டின் சட்டத்தின்படி, இங்கு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் விவரங்களை யாருக்கும் தர இயலாது’ என்று பணிவாகவும் உறுதியாகவும் கூறினான்.

ஆப்பிரிக்க அரசியல்வாதி இதை ஒரு வகையில் எதிர்பார்த்திருந்தான். ஆகவே கொஞ்சமும் தளரவில்லை. அந்த ஊழல்வாதிகளைக் குறித்ததான மேலும் பல சங்கதிகளைக் கூறலானான். ‘அவர்கள் கணக்கு வைத்திருப்பதாகத் தனக்கு வந்த தகவல் மிகவும் நம்பகமானதுதான், அவர்கள் சட்டத்தின் முன் மாட்டுவது நிச்சயம்; அவ்வாறு மாட்டினால் அந்த ஊழல்களின் விவரங்களெல்லாம் பகிரங்கமாகும். கூடவே அவர்கள் கணக்கு வைத்திருந்த வங்கியின் பெயரும் வெளியில் வந்து நாறிப்போகும். ஆகவே வங்கியின் உண்மையான நலனுக்காகவாவது விவரங்களைத் தரவேண்டியது அவசியம்’ என்று நிர்ப்பந்தித்துக் கோரினான்.

பொறுமையுடன் அனைத்தையும் கேட்டுக் கொண்ட அந்த மேனேஜர், மீண்டும் பணிவாகத் தான் முன்பு சொன்னதையே திரும்பவும் சொன்னான்.

இதற்கும் தளராத அரசியல்வாதி தன்னுடைய தேசத்தில் நிலவும், மக்களின் ஏழ்மை, வறட்சி முதலான அல்லற்பாடுகள் குறித்தும் அவர்களின் துயரமான, அவலமான நிலைகளைப் பற்றியும், அவர்கள் எந்த அளவுக்குப் பலவிதமான ஊழல்களால் பாதிக்கப்பட்டு வதங்கிப் போயிருக்கிறார்கள் என்றெல்லாம் உருக்கமாக விவரித்து, அந்த ஊழல்காரர்கள் இந்தப் பதுக்கிய பணத்தையெல்லாம் உபயோகித்து மீண்டும் தங்கள் தேசத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி எவ்வளவு நெருக்கடிகளைக் கொடுப்பார்கள் என்றும், அந்த வங்கி கொடுக்கும் விவரங்கள் எந்த அளவுக்குத் தன் தேசத்தின் எதிர்காலத்துக்கு அவசியம் என்றும் எடுத்துச்சொல்லி, இது வங்கிகளின் மனசாட்சிக்கான சோதனை என்பதாகக் கருத்தில் கொண்டு, விவரங்களைத் தந்தே தீரவேண்டும் என மிகவும் மன்றாடிக் கேட்டுக் கொண்டான்.

தனிப்பட்ட முறையிலாவது மனசாட்சியை விசாரித்து அதன்படி விவரங்கள் கொடுக்கவேண்டும் என்றும் அந்த மேனேஜரின் நெஞ்சுருகும்படி கெஞ்சினான். தன் பணிவிலும் இறுக்கத்திலும் இம்மிகூட மாறாத அந்த மேனேஜரோ அத்தனையும் பொறுமையாகவும், சிரத்தையாகவும் கேட்ட பின்பு, மன்னிப்பு மட்டும் கேட்டுக் கொண்டு, கொஞ்சமும் அசராமல், தான் முன்பு பாடிய அதே பாட்டையே மீண்டும் பாடினான்.

கோபமான அரசியல்வாதி, தாங்கள் எந்த அளவுக்கு மக்கள் நலனுக்குப் பாடுபட்டோம், ஆட்சி மாற்றத்திற்காக உலகில் எத்தனை அமைப்புகள் தங்களுக்கு உதவிகள் புரிந்தன என்றெல்லாம் அடுக்கடுக்காக எடுத்துக்கூறி, விவரங்களைத் தரவில்லையெனில் உலக அரங்கில் இதை ஒரு முக்கிய கோரிக்கை அம்சமாக எடுத்துச் சென்று அந்த வங்கியின் பெயரைப் பல விதங்களிலும் கெடுத்து அந்த வங்கியையே முடக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும், ‘நாங்கள் சொன்னதை நிச்சயம் செய்வோம்’ என்று மிகக் கடுமையாக எச்சரித்தான். பணிவும் இறுக்கமும் சற்றும் மாறாத அந்த மேனேஜர், ‘ரொம்ப நல்லது அப்படியே செய்யுங்கள், ஆனால் விவரங்கள் கொடுக்க இயலாது’ என்றான்.

அரசியல்வாதி ஆவேசமானான். எதிர்பாராத வகையில் சட்டென்று தன் கைத்துப்பாக்கியை எடுத்து மேனேஜரின் நெற்றிப் பொட்டில் அழுத்தினான். ‘இதோ பார், விவரங்களைத் தரமறுத்தால் இந்தக் கணமே உன் விவரங்களுடன் நீயும் சொர்க்கத்துக்கோ அல்லது நரகத்துக்கோ பயணப்பட வேண்டியதுதான். இந்த நொடியே உன்னைக் கொன்று போட்டாலும் என்னால் என் தேசத்திற்கு பத்திரமாகப் போய்ச்சேர முடியும்; உங்கள் சட்டங்களாலோ, எங்கள் சட்டங்களாலோ என்னை எதுவும் செய்ய முடியாது என்பது உனக்கே தெரியும். வாழ்வா, சாவா, ஒரு நொடியில் முடிவெடு’ என்று ஆழ்ந்த உறுதியான குரலில் அதேசமயம் மிகக் கடுமையாக மிரட்டினான்.

அவன் மிரட்டலில் வெளிப்பட்ட சந்தேகமில்லாத உறுதியை நன்கு புரிந்துகொண்ட மேனேஜரின் கை கால்களெல்லாம் பீதியில் நடுங்கலாயின. அந்தக் குளிரிலும், வியர்வையில் தொப்பலாக நனைந்து போனான். நடுங்கும் குரலில் மெதுவாகச் சொன்னான், ‘நான் எங்கள் நாட்டின் சட்டப்படிதான் வேலை செய்கிறேன். என்னைக் கொல்வதென்றால் கொன்றுகொள், ஆனால் விவரங்கள் தர இயலாது’.

அரசியல்வாதி பின்வாங்கினான். அமைதியாகத் தன் இருக்கையில் நன்கு சாய்ந்து அமர்ந்து கொண்டான். முகத்தில் ஒருவகையான திருப்தி ரேகையின் சாயல் இருந்தது. துப்பாக்கியை பிரீஃப்கேஸில் வைத்துவிட்டுப் பேனாவை எடுத்துக் கொண்டான். எதிரில் இன்னும் பயத்திலிருந்தும் நடுக்கத்திலிருந்தும் விடுபடாத மேனேஜரைப் பார்த்தான். ‘இப்படிப்பட்ட ஒரு வங்கிதான் எனக்குத் தேவை’ என்று சொல்லி, ‘உங்கள் வங்கியில் நான் கணக்கு ஆரம்பிக்க வேண்டுமென்றால் என்னென்ன செய்ய வேண்டும்?’ என்று வினவலானான்.

ஒரு பிரபல ஆங்கில நாவலாசிரியரின் சுமார் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான கதைத் தொகுப்பில் படித்த ஒரு சிறுகதையின் சுருக்கம்தான் நாம் மேலே கண்டது. கதை வேண்டுமானால் கற்பனையாக இருக்கலாம்.

ஆனால் விவரங்களில் எல்லாம் உண்மையில்லாமல் இல்லை.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (4-Dec-16, 10:35 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 210

மேலே