உற்றத் துணையின்றேல்
கல்லோடு மோதிய உளியோ
வெற்றிக் களிப்பில் எக்காளமிடும்
கல்லோ அடிமேல் அடிபட்டு
கற்சிலையாகி கலை விருந்தாகும்
ஆர்ப்பரிக்கும் அலைகடலோ
அரிக்கும் உவர்நீரை உமிழும்
அமைதியாய் ஓடும் நதிநீரோ
பாசனமாகி அகிலம் செழிக்கும்
கருக்கல் நிலவின் பொலிவு
கதிரவன் கருணை கனிவு
தகுதி மறந்து தகைமை துறப்பின்
தன்னிலை இழந்த பகைபழிப்பு
பொன்னை உருக்கும் பொங்கனல்
வாகையில் கொழுந்திட்டு வான்தொடும்
கருக்கும் பொன்னோ மெருகேறி
புரிமுக கலசமாய் முடிசூடும்
வித்துக்கள் புதைந்து விருட்சம் ஓங்கும்
பற்றுடன் வேர்கள் புவிமடி ஊன்றின்
பெற்ற அறிவும் கற்றக் கல்வியும்
உற்றத் துணையின்றேல் ஆற்றலற்று உறங்கும்!
கவிதாயினி அமுதா பொற்கொடி