கறவை மாட்டின் கதை

ஒரு விவசாயியிடம் பசுமாடு ஒன்று இருந்தது. அது ஒரு வேளைக்கு 1 லிட்டர் பால் தந்து வந்தது. அந்த கிராமத்துக்கு சூட், பூட் போட்ட நவீன கால்நடை மருத்துவர் வந்தார். வந்தவுடன் கிராமத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு, அந்த கிராமத்தில் வளத்தைப் பெருக்குகிறேன் என்று வார்த்தைஜாலம் காட்டி மயக்கினார்.

பசுமாடுகள் சரியான தீவனத்தை உட்கொள்ளாமல் புல், வைக்கோல் போன்ற பழமையான, அதிக சத்தற்றவைகளைச் சாப்பிடுவதால்தான் குறைந்த அளவு பால் தருகிறது; நான் சத்து வாய்ந்த அதி நவீன தீவனத்தை வழங்கப் போகிறேன். அதனைச் சாப்பிட்டால் ஒரு நாளைக்கு பசுமாடுகள் 10 லிட்டர் பால் கறக்கும் என்று தடாலென்று அறிவித்துவிட்டு, அத்தனை மாடுகளும் அந்த தீவனத்தை மட்டுமே சாப்பிட வேண்டும் என்றும், மாடுகள் மேய்ச்சலுக்கே செல்வது தடை செய்யப்படுவதாகவும் அறிவித்தார்.

அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அனைத்து மாடுகளையும் ஒரு பொது இடத்தில் கொண்டு வந்து கட்டிவிடுமாறும், சம்பந்தப்பட்ட மாட்டின் சொந்தக்காரர்கள் தினந்தோறும் வந்து தங்களுக்குத் தேவையான பாலைக் கறந்து எடுத்துச் செல்லலாம் என்றும் அறிவித்தார். அப்பாவி விவசாயிகளுக்கும், அவர்களிடமிருந்து பாலை வாங்கி உபயோகிக்கும் இதர கிராமத்தினருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை.. ஆஹா, ஓஹோவென்று புகழ்ந்து தள்ளினர். விடிந்ததும் பாலாறு ஓடப்போகிறதென்று குஷியுடன் உறங்கினர்.

அடுத்த நாள் விடிந்தது. வழக்கமாக 1 லிட்டர் கறக்கும் மாடுகள் அனைத்தும் 100மிலி கூட கறக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், பல மாடுகளுக்குத் தீவனம் ஒத்துக் கொள்ளாததால் சுருண்டு படுத்துவிட்டன. மாட்டின் சொந்தக்காரர்கள் நொந்து போய்விட்டனர். பாலை வாங்குபவர்களோ அடுத்த நாள் சரியாகிவிடும் என்று தினந்தோறும் காத்திருக்கத் தொடங்கினர். ஆனால், கறவை மறந்த மாடுகள் மறந்த பாடுதான். பாலுக்குப் பதிலாக வெறும் காற்றுதான் வந்தது.

‘என்னய்யா, பெருசா உதார் விட்ட. 10 லிட்டர் கறக்கும், சத்தான தீவனங்களைச் சாப்பிடுவதால் மாட்டின் ஆரோக்கியம் பெருகும். அப்படி, இப்படின்னும் சொன்னியே, என்னாச்சு’ என்ற கேள்விகளுக்கு நவீன மருத்துவர் பதில் சொல்லாமல், தனது அல்லக்கைகளைவிட்டு விளக்கம் கொடுக்க வைத்தார். அவர்கள் சொன்ன விளக்கங்கள் இதோ:
1) மாடு பால் கம்மியாக் கறந்தாலும் பரவாயில்லை, மாட்டின் சாணம் இப்பொழுது அதிக திடத்துடன் கிடைக்கும். அதனை வைத்து நல்ல வறட்டிகள் உருவாக்கலாம்.
2) நல்ல சாணம் கிடைப்பதால் Gobar Gas தயாரிக்க வசதியாக இருக்கும். வீட்டுச் செலவு மிகப்பெருமளவில் குறையும்.
3) மாடு மெலிந்து விடுவதால், பத்து மாடுகள் கட்டக்கூடிய தொழுவத்தில் பதினைந்து மாடுகள் கட்ட முடியும். ரியல் எஸ்டேட் இம்ப்ரூவ்மெண்ட்..!!!
4) மாடுகள் மெலிந்து விடுவதால் அதனைக் கட்டுவதற்குக் கயிறுகள் தேவையில்லை. வெறும், சணலே போதும். காஸ்ட் ரிடக்க்ஷன் யூ ஸீ..!!
5) பசு மாடுகள் பால் கறவை குறைவதால் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு மென்மேலும் பசு மாடுகள் அதிகமாகி அவையும் சோனியாகி விடுவது கிளைக்கதை.

வெளி நகரங்களில் சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்கள் வாங்கி வந்து கிராமத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் பணக்காரர்கள் மேற்குறிப்பிட்ட நல்ல விஷயங்களை கிராம மக்களிடம் எடுத்துக்கூறி பிரச்சாரம் செய்ததுடன் தங்கள் பங்குக்கு சில ஆலோசனைகளையும் வழங்கினர்
- பால் கிடைக்கவில்லையென்றால் பால் பவுடர் வாங்கிடுங்கள்.
- குறைந்த அளவு பால் கிடைத்தால் அவற்றை நேரடியாக உபயோகிக்காமல் பால் பொருட்கள் உற்பத்திக்குக் கொடுத்து நீண்ட கால லாபத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
- பாலில் அதிகம் கால்ஷியம் இருப்பது, உடல் நலத்திற்குக் கேடு. அதனைத் தவிர்ப்பது நல்லது.

இவற்றால் கடுப்பான கிராம மக்கள் ‘இன்னிக்கு சாப்பாட்டுக்கு வழி சொல்லுங்க’ என்று கேள்வி கேட்கவும், திகைத்துப் போன திட்ட ஆதரவாளர்கள், ‘பசு மாடுகள் புல், வைக்கோல் தின்பதை நிறுத்திவிட்டதால், அதனை உணவுப் பொருட்களாக மாற்றுவதற்குப் புதிய திட்டங்கள் இதோ அறிமுகப்படுத்த இருக்கிறோம்’ என்று சொல்ல ஆரம்பிக்கவும் மக்கள் கொதித்தனர்.

வேதனையுடன் ஒரு சிறுவன், ‘நான் நாலு நாளா எனக்கும் என் தங்கச்சிப் பாப்பாவுக்கும் பால் கிடைக்குமான்னு க்யூவில நின்னுக்கிட்டு இருக்கேன், என்னிக்குக் கிடைக்கும் ?’ என்று கேட்டான்.

அப்பொழுது, “தம்பி.... எல்லையில்.....” என்று ஆரம்பிக்க...

....!!!

(வாட்ஸ்அப்பில் வந்ததாக நண்பர் ஒருவர் அனுப்பியது)

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (10-Dec-16, 8:25 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 435

மேலே