ஏழரை- சிறுகதை

“ எல்லாம் டிஜிட்டல்மயம்” என்ற கோஷங்கள் கேட்கும் நேரத்தில், ஒரு கிராமத்தானும், என்ன இது புதுசா இருக்கே, நாமும் கத்துக்கலாமே என்று தனது ஐந்து வயது பேரனிடம் ஸ்மார்ட் போனில் அரிச்சுவடியைக் கற்றுக் கொண்டு வாங்க வேண்டிய பொருட்களுக்காக நகரத்திலுள்ள ஒரு பெரிய கடைக்கு போனான்.
டெபிட் கார்டு-கிரெடிட் கார்டு இப்பொழுது நவினமயமாய் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது கார்டை கடைக்கார்ர் தேய்க்கும்போது ஸ்மார்ட் போனில் அழைப்பு வந்து அப்போதைய நிலவரத்தை கஸ்டமர் கேர் சர்வீஸ் வழியே தெரிவிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த விவரத்தினை தெரிந்து கொள்ளாமல் கடையில் தேவையான பொருட்களை வாங்கிவிட்டு, தனது ”அலிபாபா விளக்கினை …அதாங்க டெபிட் கார்டு ( அலிபாபா காலத்துல விளக்கு தேய்ச்சா எல்லாம் கிடைக்கும், இப்போ டெபிட்-கிரெடிட் கார்டு தேய்ச்சா எல்லாமும் கிடைக்கும்ங்கறாங்களே, அதனால அதை கடைக்கார்ரிடம் கொடுத்தான்.
கடைக்கார்ர் டெபிட் கார்டை ஸ்வைப் இயந்திரத்தில் தேய்த்தார்
உடனே, வாடிக்கயாளரின் ஸ்மார்ட் போனில் அழைப்பு வந்த்து.
”தங்களது டெபிட் கார்டை வணிகர் மிக மென்மையாக தேய்த்த்தால் மறுபடி சரியாக தேய்க்குமாறு தெரிவிக்கவும்” என்று அழகான குரலில் அறிவுறுத்தியது.
”கிராமத்தான் ” என்னங்க, நீங்க மெதுவாக கார்டை தேய்க்கிறீங்களாம், சரியா தேயுங்களேன்” என்றார்.
கடைக்கார்ர் இப்போது, கார்டை தேய்க்க…மறுபடியும் ஸ்மார்ட் போனில் அழைப்பு வந்து… ”இப்பொழுது கடைக்கார்ர் கார்டினை வெகு அழுத்தமாக தேய்க்கிறார்” சரியான அணுகுமுறையை கையாளச் சொல்லவும்” அன்புடன் தெரிவித்து கொள்கிறோம் என்றது
என்னங்க, அழுத்தி தேய்க்கிறீங்களாம், அதனால சரியா தேய்ங்கோ என்கிறார் கிராமத்தான்.
மீண்டும், கடைக்கார்ர் கார்டினை தேய்க்க …இப்பொழுது தங்களது விவரங்கள் சரிபார்க்கப்பட்டன. நீங்கள் ரூபாய் மூவாயிரத்து முன்னூறுறு முப்பத்து மூன்று ருபாய்க்கு” பொருட்கள் வாங்கியிருக்கிறீர்கள். அதனை உறுதி செய்ய தங்களது ஸ்மார்ட் போனில் எண் மூன்றினை அழுத்தவும் என்று தகவல் வந்த்து
கிராமத்தான் எண் மூன்றினை அழுத்தியவுடன், ”எமது சேவையை பயன்படுத்தியமைக்கு மிக்க நன்றி, எண் மூன்றினை அழுத்திய விவரத்தினை நீங்கள் கடைக்கார்ரிடம் சொல்லவில்லை என்பதினை உறுதி செய்ய நீங்கள் மூப்பத்தி மூன்றினை அழுத்தவும் என்று அழகான பெண்ணின் குரல் தெரிவித்த்து.
கிராமத்தான் இப்போது, முப்பத்து மூன்றினை அழுத்தியவுடன், ”மிக்க நன்றி ” தற்போது வானிலையில் ஏற்பட்ட மாறுதலினால், எங்களை இணைப்புகள் சரிவர இயங்குவதற்கு இயலாத்தால், நீங்கள் மூன்றரை மணி நேரம் கழித்து வந்து கடைக்கார்ரிடம் வந்து கார்டை தேய்த்து விவரங்களை சரிபார்த்த பின்னர் பொருட்களை வாங்கி கொள்ளலாம் ” என்று ஆண்குரலில் தெரிவிக்கப்பட்டது.
கிராமத்தான் வீட்டுக்கு சென்று ….பின்னர் கடைக்கு சென்றபோது ஏழரை ஆகிவிட்டிருந்த்து.
----கே. அசோகன்