பிரம்மனின் கவிதை

பிரம்மனின் தொழிற்சாலையில்
செம்பழுப்பு சூரியக் குழம்பை
பொன் அச்சில்
வார்த்து செய்த மேனி;

பார்ப்பவர்களின்
உயிரையெல்லாம் உள்ளிழுக்கும்
கருந்துளைக் கண்கள்;

பொன்னில் பூத்த முகம்
இருளை இருட்டடிப்பு
செய்யும் கேசம்,

ரோஜா மலர்களும்
கடன் கேட்கும்
இவளின் இதழ் நிறத்தை

ஆடவரெல்லாம் கண்களால்
அள்ளிப் பருகும்
அழகுடையவள்

இவள் நந்தவனத்தில்
புகுந்தாள்
என்னைப் பறித்துச்
சூடிக்கொள்ளமாட்டாளா?
என்று ஏங்கும் பூக்களனைத்தும்
இவளிடம் நடை பயில
அன்னகூட்டம் அலைமோதும்..,

துணிகடைக்குச் சென்றால்
இவள் மார்பில் சாய்ந்து
மேனி தாங்கிட
துடிக்கும் ஆடைகளனைத்தும்.,
இவள் மேனி சேராத
துகில் நெசவாளனைச்
சபிக்கும்;

வைர, பொன்நகைகளெல்லாம்
அவள் வாங்கிய
சிறு வெள்ளிக் கொலுசின்
மீது பொறாமைக் கொள்ளும்,

இவள் பார்வை பட்ட
இடமெல்லாம்
காதல் தழலில் வேகும்;

கன்னத்தில்
குழி பறித்து
காதல் முக்தி அளிப்பாள்.

எழுதியவர் : இளசை முகேஷ் (20-Dec-16, 8:31 pm)
Tanglish : pirammanin kavithai
பார்வை : 221

மேலே