கர்ணன்
தங்க நிறத்தாலே
அங்கத்தில் கவசம் கொண்டாயே...
தாயின் கரத்தாலே
நதி அலையில் மிதந்தாயே - கர்ணா
நதி அலையில் மிதந்தாயே......
அதிரதன் கை கிடைத்து
இராதை மடி மலர்ந்தாயே ...
விதி ஆடும் விளையாட்டில்
பலியான பிள்ளை நீதானே - கர்ணா
பலியான பிள்ளை நீதானே.......
தங்க நிறத்தாலே......
சூரியன் வரம் கொடுத்து
குந்தியின் மடி பிரிந்து
சூத்திரனாய் வளர்ந்தாயே - கர்ணா
சூத்திரனாய் வாழ்ந்தாயே......
மன்னரும் கூடிய சபையில்
உன்னை அவமதித்த வேளையில்
அங்கநாடு தந்தானே - துரியன்
நட்பைக் கேட்டானே......
செய்நன்றி மறவாது
தம்பிகளை நீ எதிர்த்து
அதர்மத்தில் நுழைந்தாயே - கர்ணா
தர்மத்தில் நின்றாயே......
தங்க நிறத்தாலே......
இந்திரன் வரம் கேட்க
இல்லை என்று சொல்லாது
அறுத்து எடுத்தாயே - கர்ணா
கவசம் கொடுத்தாயே......
சக்கரம் புதைந்த தென்று
தோளால் நீ தூக்க
அம்புகள் தொடுத்தானே - அர்ச்சுனன்
நெஞ்சைத் துளைத்தானே......
தருமம் தலை காக்க
கண்ணனும் அதைக் கேட்க
உதிரத்தால் ஈந்தாயே - கர்ணா
இன்னுயிர் துறந்தாயே......
தங்க நிறத்தாலே......