களஞ்சியம்

காவிரிப் பாசனம்
கரையுடைத்த காலத்தில்
கோரை வாய்க்காலில்
ஊர்க்கொழித்த நேரத்தில்
சுருக்காய் பாயும்
குறுங்கண்ணிப் பாய்ச்சலில்
கட்டுடல்
வியர்வையுந்தானிறைத்து
பொன்னின் குவியலாய்
நெற்குவித்த
தன்னிறை தானிய
தஞ்சையிதில்
தாத்தனும் பாட்டனும்
தலைமுறை சேமிப்பில்
அடுக்கிச் சேர்த்த
கட்டையல்ல...!
வறுமையும் வளமையும்
விலைப்பேசா
சுயத்தில் கறுத்த
மீசையிலும்
புயத்திலடுக்கிய
ஆண்மையிலும்
அண்டிப் பிழைத்திடா
ஆற்றலின் பிம்பமாய்
செதுக்கிப் போன
சட்டமிது!
அன்னோரிதில்
அமுக்கி குலுக்கி
சரிய நிறைத்ததெல்லாம்
வெறும் நெல்மணிகள்
மட்டுமல்ல...
நெற்றி வியர்வையும்!
நேரில்லா உழைப்பும்!
நிகரற்ற களிப்பும்!
உலுத்துப் போகாதொரு
உன்னத நெறியுந்தான்!
பொன்னிநதி பொய்யாகி
கருமேகம் கானலாகி
பாலைவன பூமியாகி
கஞ்சிக்கு கையேந்தும்
பஞ்சத்தின் விளிம்பதிலும்
நெருப்புக்கு இரையென
அடுப்படி ஏகாமல்
இருக்கிறதோர்
வாழ்வியலின்
சத்திய சாட்சியாய்!
வாரிக்குவிக்கவொரு
விளைச்சலின்றியும்
ஏர்பிடித்து பாரளந்த
பரம்பரை பதிவுகளில்
வாழ்ந்துவிட்டு
போகட்டுமோர்
தலைமுறை நீட்சியாய்!!!
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

எழுதியவர் : தானியேல் நவீன்ராசு (24-Dec-16, 5:11 pm)
பார்வை : 61

மேலே