என்றும் வாழ்வார் நமது தமிழண்ணல் கவிஞர் இரா இரவி

என்றும் வாழ்வார் நமது தமிழண்ணல் !
கவிஞர் இரா .இரவி !

பெரிய கருப்பன் என்ற இயற்பெயர் துறந்து
பெரிய தமிழண்ணலாக உயர்ந்து காட்டியவர் !

தமிழண்ணல் என்பது புனைப்பெயர் மட்டுமல்ல
தமிழின் அண்ணல் காரணப் பெயரானது !

தமிழுக்கு யார் தீங்கு செய்தாலும் உடன்
தயங்காமல் தட்டிக்கேட்ட நெஞ்சுரம் மிக்கார் !

தமிழ்வழிக்கல்விக்காக உண்ணாவிரதம் இருந்தவர்
தமிழை உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் !

நெற்குப்பை எனும் சிற்றூரில் பிறந்து
நெல்மணியாய் தமிழ்மணியாய் சிறந்தவர் !

நாகசாமி என்பவரின் பொய்யுரைக்கு உடன்
நாகமெனச் சீறி உண்மைகளை உரைத்தவர் !

நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே என்று
நெஞ்சுரத்துடன் வாதிட்டடு வாழ்ந்த நக்கீரர் !

தூங்கிய தமிழரைத் தட்டி எழுப்பியவர்
தூங்கும்போதும் தமிழை மட்டுமே நினைத்தவர் !

சதாசிவநகரில் வாழ்ந்து முத்திரைப் பதித்தவர்
சதா தமிழையே என்றும் போற்றியவர் !

என் போன்ற எளியவர்கள் கேட்டபோதும்
இன்முகத்துடன் அணிந்துரை தந்து மகிழ்ந்தவர் !

இறுதி மூச்சு உள்ளவரை இனிய தமிழுக்காக
எழுதியும் பேசியும் வந்த தமிழ் அரிமா !

எத்தனையோ விருதுகள் பெற்றபோதும்
எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாதவர் !

தொல்காப்பியதைத் தூக்கிப் பிடித்தவர்
திருக்குறளுக்கு எளிய உரை எழுதியவர் !

சங்க இலக்கியத்தை சாமானியருக்கும்
சிந்திக்கும் வண்ணம் விளக்கி வந்தவர் !

பள்ளி ஆசிரியராகப் பணி தொடங்கி
பல்கலைக்கழக துறைத் தலைவரானவர் !

தீந்தமிழ் தியராசர் கல்லூரியில் பணியாற்றி
தீந் தமிழ் வளர்த்துப் பெருமைப் பெற்றவர் !

மணிவண்ணன் என்ற மணியான மகனைப் பெற்றவர்
மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து சிறந்தவர் !

தமிழ்த் தேனீ இரா .மோகன் உள்ளிட்ட பலரை
தன் சீடர்களாக உருவாக்கி மகிழ்ந்தவர் !

வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தவர்
வாழ்நாளை தமிழுக்கு முழுமையாகத் தந்தவர் !

என்றும் மறைவு இல்லை தமிழண்ணலுக்கு
என்றும் வாழ்வார் நமது தமிழண்ணல் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (26-Dec-16, 10:59 am)
பார்வை : 76

மேலே