கவியரசே என் கண்ணதாசா
காகிதம் நிரப்புபவரெல்லாம்
கவிஞரென்றும்,
புலம்பித் திரிபவரெல்லாம்
புலவரென்றும்,
மார்தட்டும் உலகில்
கட்டவிழ்த்த கற்பனையில்
மொட்டவிழ்த்த வார்த்தைகளில்
கருத்துக் களஞ்சியங்களை
காட்டாற்று வெள்ளம்போல்
கவிமழை பொழிந்தாய் நீ !
நீ விதைத்ததால்
வளர்ந்த விருட்சங்களில்
பெற்ற எச்சங்களை
ஜீரணித்தே எழுத
எத்தனிக்கிறோம் நாங்கள் !
இலக்கண,இலக்கியம்
படித்ததாலேயே
தலைக்கனம் கொள்பவரிடையே
இலக்கியத்திற்கே
புது இலக்கணம்
படைத்தவன் நீ !
மதத்தின் பெயரால்
மதம் பிடித்தலைபவர்
மத்தியில் அர்த்தமுள்ள
இந்து மதத்தோடு
இயேசு காவியமும்
இயற்றி மனிதம்
காத்தாய் நீ !
பாமரனுக்கும்
உன் பாடல்களால்
பல்கலைக்கழகமானாய் நீ !
புண்பட்ட உள்ளங்களுக்கு
பண்பட்ட வார்த்தைகளால்
மருந்திட்டாய் நீ !
ஆசைகளால் மனம்
ஆர்ப்பரிக்கும் போது
நிலையாமையின்
தத்துவம் சொல்லி
நெஞ்சை நிலைப்படுத்தினாய் நீ !
காதலோ,காமமோ
வாழ்வோ,சாவோ
அனைத்திலும்
தாலாட்டாகவோ,
தத்துவமாகவோ
கவி வடிவில்
கலந்திருக்கிறாய் நீ !
மன நோய்க்கெல்லாம்
மருந்தானவனே !
வானையும் தாண்டி
வளர்ந்திருக்கும் உன்னை
வார்த்தைகளில் அடக்கி
வாழ்த்த வயதில்லை எமக்கு !
உன் இதய நந்தவனத்தில்
மலர்ந்த கவிதைமலர்களின்
வாசம் நுகர்ந்தே வாழும்
எம்மால் ஒற்றை வார்த்தையால் நன்றியை
உரைத்திட முடியாது !
காற்றுள்ளவரை வாழ்க
நீயும் உன் கவியுமென்று
வாழ்த்த மட்டுமே
முடிகிறது !
வாழ்த்த மட்டுமல்ல
வணங்கவும் செய்கிறோம் !
வாழ்க நீயும் உன் கவியும் !