உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது

#உள்ளிருந்து_ஒரு_குரல்_கேட்டது....

குழந்தையிலேயே உடன்பிறப்புகளை தூக்கி முழுங்கிய நான் சந்தித்தெல்லாம் ஏமாற்றங்களைத் தான்...

சாதி என்னும் கொடுங்கோலனால்,
பள்ளிக்கூடமென்னும் கோவிலில்,
ஆசிரியர்களென்னும்
புனிதர்களால்,
குற்றவாளியாக்கப்பட்டேன்,
ஒரு பெண்ணைக் காதலித்த குற்றத்தால்...

மனதால் நேசித்த எனக்கு,
ஒழுக்கங் கெட்டவனென்ற அவப்பெயரைப்
பட்டமென்றளித்து,
பள்ளிக்கூடத்தில் ஜெயில் கைதியைப்
போல் பயின்றேன்...

ஆசிரியர்களின் மனதில் நல்ல மாணவனென்ற கோபுரத்திலிருந்த நான்,
ஒரே ஒரு செயலால் தொப்பென்று சாக்கடையில் விழுந்தேன்...

யாவரும் அருவருக்குமொருவனாய்,
ஏழ்மையால் உயர்ப்படிப்பிற்கு பணமின்றி தொழிற்சாலையில்
பளுதூக்கும் பணியாளனாய் பணியாற்றிய என்னைக் கண்டோர் காறி உமிழ்ந்தார்கள்...

யாவற்றையும் பொறுத்துக் கொண்டு,
என்னை நானே தனிமையென்னும் சிறையிலடைத்தேன்...

தனிமை ஒரு நரகம்...
ஆனால், தன்னிடம் வந்தாரை வெறுங்கையோடு அனுப்பியதில்லை...

ஒவ்வொரு கனநேரமும்,
வேலையில்லாத போதெல்லாம்,
என்னுடன் நானே பேசிக் கொள்வது வழக்கம்...
காண்போர் என்னை பைத்தியம் முற்றிவிட்டதென்பர்...

நானும் இது குறித்து எனது தந்தையிடம் கூறிய போது, அவர் சொன்னார், " மகனே!
இந்த உலகில் கூடி மகிழ்ந்த பெண்டிரும்,
மக்களும் கடைசி வரை உடன்வரமாட்டார். கடைசி வரை உன்னுடன் இருப்பதும், மரணம் கடந்து உன்னோடு பயணிப்பதும் நீ செய்யும் அறமும், நீ பெற்ற ஞானமும் தான்.. ", என்று....

அறம் செய்ய பொருளில்லை, எனினும் நல் ஞானத்தைப் பெறுவோமென எண்ணிக் கொண்டு,
தந்தையிடம் கேட்டேன், " ஞானம் பெறும் வழி யாது? ",என்று...

அதைக் கேட்ட என் தந்தையானவர் சிரித்தார்...
" ஏனப்பா பதில் சொல்லாமல் சிரிக்கிறீர்கள்??. ", என்றேன்...

அதற்கு அவர் சொன்னார், " ஞானம் பெறும் வழியில் பயணிப்பதென்பது முடிவில்லாப் பாதையில் பயணிப்பது போல்..
அதை சொல்லால் உணர்த்துவது கஷ்டம்...
ஆனால், நீ உனது பகுத்தறிவின் வழிப் பயணி. ", என்று...

அவருடைய வார்த்தையின் பொருளானது அப்போது விளங்கவில்லை...
இருப்பினும்,
துன்பம் ஏற்படும் போதெல்லாம்,
பழைய ஞாபகங்கள் வரும் போதெல்லாம்,
சிந்தனையில் ஆழ்வதென் வழக்கமாயிற்று...

முதன் முதலில் தனிமையில் சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் போதெல்லாம்,
காதல் கவிதைகளையும்,
காதல் தோல்வி கவிதைகளையும் எழுதி எழுதிக் குவித்தேன்...

இவ்வாறிருக்கையில் தான் அன்றொரு நாள் அந்த அற்புதம் நிகழ்ந்தது...
ஆம்...
கவலையோடு சிந்தனையில் ஆழ்ந்திருக்கையில்,
உள்ளிருந்து ஒரு குரல் ஒலித்தது...
அக்குரல் கேட்ட எனது சப்த நாடிகளும் அமைதியாகிவிட்டன...
இதயத்துடிப்பின் வேகம் குறைந்துவிட்டது...

அப்படியொரு குரல் அது...
எவருடைய அதிகாரத்திற்கும் தலைவணங்காமல்,
எதிர்வாதம் செய்யும் நான் இவ்வதிகாரக்குரலை ஆனந்தமாய்
ஏற்றேன்....

அந்தக் குரலென்ன உரைத்தென்று அறிவீரோ??...
சொல்வேன்...
கேளீர்....

" தீபமொன்றை ஏற்று...
அதன் ஒளியின் பிரகாசம் காண்...
அருவமான காற்றினிலே தீபத்தின் நடனம் காண்...
நீ எப்போதெல்லாம் கவலையாய் உணர்கிறாயோ,
அப்போதெல்லாம் என்னை நினை...
தீபத்தின் பிரகாசமான ஒளியைக் காண்...
நான் எப்போதும் உன்னோடு இருப்பேன்...
இரவோ, பகலோ,
பிரகாசமான தீபமாய் உன்னுள் எரிந்துக் கொண்டிருப்பேன்...
உனது புறக்கண்களால் என்னை காண இயலாது...
ஆனால், உனது இதயத்தில் நான் பிரகாசமாய் எரிந்து கொண்டிருப்பதை உனது அகக்கண்ணால்
காண இயலும்...
உனது மனதால் உணர இயலும்...
சோகங்களைப் பற்றி ஒருபோதும் சிந்திக்காதே...
அவ்வாறு சோகங்களைப் பற்றி நீ சிந்திப்பதன் அர்த்தம்,
நான் உன்னுள் இல்லை என்பதே...
மகிழ்ச்சியைப் பற்றி யோசி...
நன்மையை நாடு...
அறமென்பது பொருளால் மட்டும் செய்யப்படுவதில்லை...
நல்லறிவை உலகிற்கு எடுத்துரைப்பதும்
உரைத்தவாறு நீ வாழ்ந்து காட்டுவதுமே மகத்தான அறமென்று உணர்...
நான் உன்னிலிருந்து அகலேன்...
உன்னுள் தானிருப்பேன்...
ஏனெனில், நீ தான் எனது தங்குமிடம்...

நீ எப்போதெல்லாம் தீபத்தை ஏற்றுகிறாயோ,
தீபத்தின் பிரகாசம் காண்கிறாயோ,
அருவமான காற்றினிலே தீபத்தின் நடனம் காண்கிறாயோ,
அப்போதெல்லாம் நீ அறிவாய்,
உன்னை விட்டு நான் போகவில்லையென்று...
நீ எப்போது என்னை முழுதாய் உணருகிறாயோ,
அப்போது நீ அறிவாய்,
நான் உன்னுள் இறைவனுடன் அமர்ந்திருக்கிறேனென்று...
இப்போது கூட நான் உன்னையே தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்...
சோகமென்னும் எண்ணத்தை கைவிடு...
பகுத்தறிவென்னும் தீபம் ஏற்று...
அத்தீபம் உனக்கு வழிக்காட்டும்.... ", என்று...

நடந்தது கனவா? நனவா? என்று தெரியாது, அப்படியே தூங்கிப் போனேன்...
எழுந்ததும் உணர்ந்தேன் புத்தம் புதிதாய் உலகில் பிறந்ததாய்...
உயிர்களிடம் அன்பு கொண்டேன்...
முடிந்தவரை என்னை சுற்றி இருப்பவர்களின் கவலைகளைப் போக்க முயற்சித்தேன்...
அதற்காய் பல வரிகள்,
பல கதைகள், பல நற்சிந்தனைகளென எழுத ஆரம்பித்துவிட்டேன்...
இப்போது காதல் கவிதையென்றை எழுத எண்ணினாலும்,
அதிலும் அறமென்னும் அர்த்தமே மேலோங்க எழுதிக் கொள்கிறேன்...

முன்பு நானெழுதிப் பலரிடம் பாராட்டுகள் வாங்கிய அக்காதல் கவிதைகளை இப்போது திருப்பிப் பார்த்தால்,
அவையெல்லாம் குப்பைகளென்றே எனக்கு தோன்றுகிறதேனோ???...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (29-Dec-16, 9:51 pm)
பார்வை : 936

மேலே