கடைசி கடிதம் தற்கொலைக்கு முன்
கடைசி கடிதம் (தற்கொலைக்கு முன்)
கையோடு முத்தமிட்டு
கதிரா விளைவேன்னு
எம் பசிய தீர்க்க
உம் பிள்ளை இருக்கேன்னு
ஆசையா விழுந்த
விதை நெல்லு மக்கா . . .
மண்ணோடு உறவாடி
மகசூலா வரேன்னு
கதிரா வெடிச்சு
கடன்தீர்க்க போறேன்னு
வாழ்க்கை பட்ட வயலுக்கு
வாழ போன
எம் மக்கா . . .
சேற்றோடு உறவாடி
நாற்றாகி வருகையிலே
எம்மக்க அழகெல்லாம்
யாரு கண்ணும் படுமோன்னு
திருஷ்டி சுத்தி
போடையிலே
எனை பார்த்து
பச்சை பச்சையா சிரிச்ச மக்கா . . .
நீங்களும் நானும்
என்னதான் பேசுவோமோ
வார்த்தையும் இருக்காது
சத்தமும் இருக்காது
ஆனாலும் நமக்குள்ள
உறையாடல் முடியாது
மண்வெட்டி பட்டா
வலி தாங்க மாட்டேன்னு
கையால பாத்தி கட்ட
பார்த்த சனங்களெல்லாம்
கோட்டி புடிச்சிடுச்சின்னு
கொலவ போட்டு கத்தினாலும்
என்னோட பாசமெல்லாம்
நாத்து மக்கா
உங்களுக்கு மட்டும்தான் புரியும்
பொன்நகையே இல்லாட்டாலும்
உன் அழகு ஒசந்ததன்னு
சும்மா ஒரு பேச்சு சொல்லி
பொஞ்சாதி கழட்டி தர
கம்மல் மூக்குத்திய
செட்டியார் கடையில
அடமானம் வச்சு வச்சு
உறமா வாங்கினாலும்
எம்மக்க பசியார
இன்னைக்கு போதுமுன்னு
ஓடோடி நான் வந்து
உறம் போட்ட காலமெல்லாம்
நமக்குள்ள பொற்காலந்தான்
ஒன்னும் மண்ணுமா இருந்தவகல
வலிக்காம பெயர்த்தெடுத்து
சார சாரமா நட்டு வச்சு
அழகு பார்த்த வேலையிலே
யாரு கண்ணு பட்டுச்சோ
சாமி கண்ணு மூடுச்சோ
நஞ்ச புஞ்ச எல்லாமே
நஞ்சு வந்து கலந்துச்சோ
நாசமா போனுமுன்னு
செய்வினை நேர்ந்துச்சோ
குலம் காக்கும் சாமியெல்லாம்
குலமழிஞ்சு போயிடுச்சோ
வாஞ்சையா வானம் பார்த்தா
மும்மாரி பொழியுமே
வாய்க்கா கிணறு எல்லாம்
நிறைமாசமா ஆகுமே
வான்மும் கண்மூடி
இறைவனடி சேர்ந்துச்சோ
மேக குழந்தையெல்லாம்
கருகலைஞ்சு போயிடுச்சோ
கந்து வட்டி வாங்கியாந்து
கடைசி சொட்டு வரை
கிணற்று நீர் இறச்சு
நிமிர்ந்து பாக்கையிலே
எம்மக்கா வாயி கூட
நிறையிலேயே
நான் உங்க வயித்துக்கு
என்ன பண்ண ?
சதி கார சர்க்காரும்
கூட்டு சேர்ந்து கொல்லையிலே
காவிரி தாய கூட
அணைக்கட்டி அடைச்சு வைக்க
பணத்துக்கும் பதவிக்கும்
போட்டி போடும் சூழலிலே
துப்புகெட்ட மனுசனையெல்லாம்
தலைவனாக்கி வச்சோமே
சட்டம் எல்லாமே
வெறும் தாளோடு நிக்கையிலே
அந்த காகிதத்த கொண்டு வந்தா
எம்மக்கா உங்களுக்கு
நீர் பாய்ச்ச
பட்டணத்து மனுசனெல்லாம்
பக்கத்து மாநிலத்தில்
அரிசி வாங்க
செஞ்சு வச்ச சூழ்ச்சியிலே
நம்ம பொழப்ப யாரு பேச
அய்யோ அய்யய்யோ . . .
ஆசையா நான் வளர்த்த
நாத்து மக்களெல்லாம்
அற்ப ஆயுசுல
அகால மரணம் கண்டீங்களா ?
அப்பன்னுக்கு துப்பில்லன்னு
அவசரமா செத்தீங்களா?
கதிரா வெடிச்சு சிரிக்க பிறந்த
நாத்துக்களா
கருகி போயிதாய்
கானாபிணமா போறிகளா ?
எல்லாம் முடிஞ்சு போச்சு
உழவு இப்போ
எழவு ஆச்சு
பசி வந்து ஒரு பக்கம்
கடன் வந்து ஒரு பக்கம்
கந்து வட்டி ஒரு பக்கம்
வறுமை வந்து ஒரு பக்கம்
ஒத்த எழவு வந்தா
ஒரு மாசம் துக்கத்தான்
ஆனா என் மொத்த மக்க
செத்து போச்சே
இனியும் என்ன செய்ய ????
ஆசையா நான் வளர்க்க
அற்ப ஆயுசில் போன மக்கா
சாமியும் சதி பண்ண
சட்டமும் சதி பண்ண
சர்க்காரும் சதி பண்ண
வானமும் சதி பண்ண
உங்களோட நானும்
ஒத்தாசையா வரேனே . . . .
என்னை
கோழையின்னு சொல்லுவாக
ஆனா வீரன்னு யாருமில்ல
அப்படி ஒருத்தனாவது இருந்திருந்தா
காவிரிய கொண்டு வந்து
காத்திருப்பான்
உங்களையும் என்னையும்
அடுத்த ஜென்மத்துலயாவது
நல்ல இடத்தில் பொறக்கனும்னு
நினைபோட நானும் வரேன்
போலாமா எம் மக்கா . . .
கடைசியா ஒரு வார்த்தை
மனுசங்களுக்கும் சர்க்காருக்கும்
செத்து போன என் உடம்ப
யாரும் எரிக்க வேணாம்
என்னோட வயலுலேயே
எடம் பார்த்து புதைச்சு போங்க
நாளைக்கு ஏதேனும்
புல்லு பூண்டு மொளைச்சாலும்
உரமாக நான் இருந்து
அவைகளுக்கும் உணவாவேன்
சாமிகிட்ட போவேன்னோ
காத்தோட போவேன்னோ
எம்மக்க சேர்ந்த இடம்
எனை கொண்டு சேர்ப்பேனோ
இருக்குற மனுசனுங்களாவது
என் தலை முறைய
காத்து கரையேறி வாங்க . . . .
முடிஞ்சா திரும்பி வரேன்
மீண்டும் விவசாயியா . . . .
அது வரைக்கும்
கூறு போட்டு வித்துடாதிங்க
விவசாய் நிலத்தை
எல்லாம்
கடைசியிலெ
வாய்க்கரிசிக்கும்
பக்கத்து மாநிலத்துலதான்
கையேந்தனும்
அப்புறம் உங்க இஷ்டம்
இவ்வரிகள் யாவும்
இறந்து போன ஒவ்வொரு விவசாயிகளின் பாதங்களுக்கும்
பணிவான சமர்ப்பணம்
நிறைய நிறைய வலிகளுடன்
ந.சத்யா