தமிழன்

தமிழன்
வந்தாரை
வாழவைத்தான்..

சொந்தமற்றோர்க்கெல்லாம்
சோறூட்டினான்...

புயல்வீசியபோது
நெல் தூற்றினான்...

கடப்பாரையை விழுங்கிவிட்டு
கசாயம் குடித்து
பார்த்தான் ...

பொல்லாதவரையும்
நல்லோராய்
போற்றினான்...

திரைப்பட வாழ்வில்
தினம் தினம்
திளைத்தான்...

அந்நியரை
அரியணையேற்றினான்...

சண்டையில்
கை மறந்தான்...
சபையில்
வாய் மறந்தான் ...

தன் வீரத்தை
தானே..
விவேகத்தால் கொன்றான்..

திரைகடலோடியும்
திரவியம் தேடினான்...

சொந்தநாட்டில்
அஞ்சி அஞ்சி
பஞ்சம் பிழைத்தான்..

விதி விலக்கான - சில
வீரனெல்லாம்
சதியில் மாட்டி
சமாதி ஆனார்கள்....

தமிழன்
தனக்குள்
சாதி சண்டையிட்டான்

மனிதனை சாமியென்று
மண்டியிட்டான்...

பச்சை தமிழனை
காட்டில் விட்டான்...

இனச்சொந்தங்களை
இலங்கையின்
இனவெறி தீயில் விட்டான்...

சண்டைக்காரனிடம்
சகோதரத்துவம் காட்டினான்...

சந்தர்ப்பவாதிகளிடம்
சமத்துவம் பேசினான்...

தமிழன்
தன் வீர, தீர
ஜல்லிக்கட்டுக்கும்
மற்றவனிடம்
மல்லுக்கட்டினான்...

தமிழன்
தனக்கென வாழாமல்
பிறர்க்கென வாழ்ந்தான்....

கச்சத்தீவும், காவிரியும்,
முல்லை பெரியாரும், பாலாறும்
கை மாறி போனது...

காவிரியில் நீர் கேட்டான்
கண்ணீர் சொரிந்தது தமிழ் தேசம்...

கச்சத்தீவில் மீன் பிடித்தான்
சிங்களன் -இவனை
சிறை பிடித்தான்

அடிமேல் அடி
அடித்தார்கள்,
அம்மி கூட நகர்ந்தது...

தமிழன் மட்டும்
தாலாட்டு பாடுவதாய்
தவறாய் யோசித்தான்....

சாகா வரம் பெற்றும்
வாழா குணம் கொண்டான்....

மதுவின்
மயக்கத்தில்
மனம் போன போக்கில்
மாயமானான்....!

இறுதியில்,
ஐம்புலன்களும்
செயலிழந்து - தமிழன்
சகிப்புத்தன்மை நோயால்
மீளாப்படுக்கையில்
சாக கிடக்கிறான்...!!

இவன்
தொண்டுக்கு,
சாகும் தருவாயிலும்,
சாதனையாளர் விருது
கிடைத்தது....
"சொந்த நாட்டின் அகதிகள்" என்று ......!!!

எழுதியவர் : ஆ. க. முருகன் (16-Jan-17, 9:10 pm)
சேர்த்தது : ஆ க முருகன்
Tanglish : thamizhan
பார்வை : 884

மேலே