பாவையரும் பட்டமரமும்

ஆண்டுவிழாவிற்கான பட்டயப் போட்டி - மரபு கவிதை

ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

தலைப்பு :- பாவையரும் பட்டமரமும்

பாவையவள் கதறுகின்றாள்
------- பாசத்தால் பேசுகின்றாள்
சாவைஎண்ணி நிற்கின்ற
-------- சமுதாய மரவேர்கள்!!!



தீவைத்தே கருகியதோ
------- திட்டமிட்டே கருக்கியதோ
பூவையவள் சிந்துகிறாள்
-------- புவியெங்கும் கண்ணீரே !!!


விதைவிதைத்த மக்களினம்
------- விடியலினை மறந்தேபோய்
சதைப்பற்றாய் வீடுகளை
-------- சளைக்காமல் கட்டுகின்றார் .!!!


பதைபதைக்கும் உள்ளத்தால்
------- பசுமைமரம் அழிகின்ற
கதையாவும் மண்ணுலகின்
------- கலிகால நிலையன்றோ !!!!


பட்டமரம் செழித்திடுமா ?
------ பக்குவமாய் வளர்ந்திடுமா ?
நட்டவர்கள் காணவில்லை
------ நலம்கெட்டு நிற்கின்றாய் !


விட்டுவிட்டக் கைம்பெண்ணாய்
------ விதவைகோலம் பூண்டுள்ளாய்!
தொட்டுவிடும் தூரத்தில்
------ தொடுவானம் பதில்சொல்லும் .


கட்டுடலைக் கொண்டதோர்
------ காளையினைப் போன்றேநீ
எட்டிநின்றுப் பார்க்கின்றாய்
------- என்செய்வாய் நீயுந்தான் !


நட்டுவைத்தால் மரமாகி
------ நாட்டுநலன் பேணிடுவாய் !
மட்டில்லா வான்மழையும்
------ மண்ணுலகில் பெய்திடுமே !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (18-Jan-17, 4:54 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 55

மேலே