இனி சீறிப்பாயும் வாடிவாசலிருந்து காளைகளோடு எங்கள் காளையர் கூட்டமும்

மத்திய, மாநில அரசுகளே !
அழுகின்ற குழந்தைகளுக்கு
இனிப்பு கொடுத்து
ஏமாற்றுவதுபோல
அவசர சட்டத்தால்
எங்களை அசைத்துபார்க்க
ஆசைப்படாதீர்கள் !

கண்துடைப்பால் கூட்டத்தை
கலைத்திட கனா காணாதீர்கள் !

கண்ணாமூச்சிக்கெல்லாம் நாங்கள் கட்டுப்படமாட்டோம் !

அன்னிய இயக்கத்துக்காக
சட்டமியற்றுவாய் ;
தமிழனின் உரிமைக்குரலை
சட்டை செய்ய மாட்டாய் !

யார் அனுமதியும் இனி
எங்களுக்கும் தேவையில்லை !

தன்மானத்திற்கு அகராதியில்
பொருள் தேடு , தமிழனென்றிருக்கும் !

இது வெறும் சல்லிக்கட்டு க்கான கூட்டமல்ல !
சரித்திரம் படைக்கும் கூட்டம் !

இனி .............
சமுத்திரம் பெரிதா ?
எங்கள் ஜனத்திரள் பெரிதா ?
என ஊடகங்கள்
பட்டிமன்றம் நடத்தும் !

அன்னிய பொருள்கள்
இனி அடையாளமிழக்கும் !

இளநீரும், பதனீரும் இனி
எங்கள் குளிர்பானமாகும் !

ஆறுகளில் யாரும் கைப்பிடி
மண்லிலும் கை வைக்க முடியாது; விளை நிலங்களில்
யாரும் விரல் தீண்ட முடியாது !

நதி நீர் எங்களை நாடிவரும் !
மழையும் எமக்கு மனமிரங்கும் !

புதிதாய் வனங்கள் சமைப்போம் !
இயற்கை வளங்கள் காப்போம் !

எங்கள் உரிமையை
எங்களுக்கே பிச்சையிட
நீங்கள் யாரடா ?

துணிவிருந்தால் வந்து
எதிரில் நில்லடா !

வாடிவாசலிலிருந்து
இனி சீறிப்பாயும்
காளைகளோடு எம்
காளையர் கூட்டமும் !

முடிந்தால் தடுத்துப்பார் !
இல்லை தள்ளி நின்று
தமிழனின் வீரத்தை
வேடிக்கை மட்டும் பார் .,........!

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (21-Jan-17, 3:15 pm)
சேர்த்தது : காளிமுத்து
பார்வை : 83

மேலே