காற்றே
உன் மெல்லிய, அரூப
பாதங்கள் பட்டு
தலை சாய்த்தன
மரம், செடி, கொடி
புல் பூண்டுகள்.
ஓரோர் நேரம்
தென்றலாய்
தலை கோதுகிறாய்
ஓரோர் சமயம்
புயலாய்
தலை மோதுகிறாய்.
உன் அசுர வேகப்
பாய்ச்சலில்
மரங்கள் தலை சாய்கின்றன.
புல் பூண்டுகள்
வேடிக்கை பார்க்கின்றன.
மரங்களின் மீது
உனக்கென்ன கோபம்
காற்றே!
பெரும்பாலும் நீ
மௌனமாய் தான்
நடந்து போகிறாய் – எம்மைக்
கடந்து போகிறாய் – எம்மில்
கலந்து போகிறாய் – அப்போது
கரைந்து போகின்றன
வேர்வைத் துளிகள்.
வேர்வைத் துளிகளை
விரட்டுகிறாயா?
உறிஞ்சுகிறாயா?
நீ
பூக்களைப் புணர்கையில்
நறுமண வாசனையாகவும்,
சாக்கடைகளைச் சங்கமிக்கையில்
வீச்சமாகவும் இருக்கிறாய்.
பூமிப் பந்தை
நீ உருட்டி விளையாடுகிறாயா?
பூமி உன்னை
பந்தாய் விளையாடுகிறதா?
எங்கள்
பெரும்பாலான மக்களைப் போலவே
சுவடு பதிக்காமல்
இருந்து கொண்டிருக்கிறாய்.
பள்ளிக்குப் போக, சில நேரங்களில்
அடம் பிடிக்கும்
சின்னக் குழந்தைகளைப் போல
நீயும்
சில நேரங்களில் வீச மறுத்து
அடம் பிடிக்கிறாய்.
அந்த நேரங்களில் தான்
முதலில்
செயற்கையாய் உன்னை
ஏற்பாடு செய்தோம்:
மின்சாரம் கொண்டு.
அப்புறம் அதுவே
பழகிப் போனது.
அப்புறம்
மின்சாரமும்
பொய்க்கத் தொடங்கியது.
நாங்கள்
புழுக்கத்தில் தவித்தோம்.
நீயும்
கேள்வி கேட்க
முடியாத இடத்தில்தான்
இருக்கிறாய்;
எங்கள் அரசாங்கங்களைப்
போல.
மனிதர்கள்
மனிதர்களாயிருந்த
காலத்தில்
மரத்தடிகளில்
தூங்கினான் மனிதன்.
மழலையாய் இருக்கையில்
மாதாவின் தாலாட்டும்
மனிதனாய் ஆனதும்
உன் தாலாட்டும்.
நீ
மரங்களோடு
சல்லாபித்திருந்த காலத்தில்
நாங்கள்
நிம்மதியாய் உறங்கினோம்.
விழிப்பு என்பது
உறக்கத்தின் பின்தானே.
எப்போதும் விழிப்பு
எப்படி சாத்தியம்.
நீ
புயலாய் வந்து
சில மரங்களைப்
பிடுங்கிப் போகிறாய்.
இது நியாயம்தானா?
“மனிதக் காற்று”
உன் மீதும் பட்டதோ?
கவிஞன்
மிதவாதியா?
தீவிரவாதியா?
தீவிர வாதத்தை
உருவாக்கும்
மிதவாதி!
நீயும் அப்படித்தான்
பெரும்பாலான நேரத்தில்
மிதவாதத் தென்றலாகவும்
சில நேரங்களில்
தீவிரவாதப் புயலாகவும்
ஓங்காரமிடுகிறாய்.
மெல்லிய வருடலாகவும்
ஊதலாகவும்
ஊளையாகவும் மாறும்
ரசவாதத்தை
யாரிடம் கற்றாய்?
எங்கள் சுவாசமாகவும்
வாசமாகவும்,
எங்கள் மீது நேசமாகவும்
இருக்கும் உன்னை
நாங்கள்
எப்போதாவது
நினைத்துப் பார்த்தோமா?
கண்டதும் வந்து
முத்தமிடும்
காதலர் போல
கதவு திறந்ததும்
முத்தமிடும்
காற்றே!
சுவடு பதிக்காத
சூட்சுமம் நீ!
சுழலும் பூமியின்
சூத்திரம் நீ!
வருடுவதும், வேர்வை
திருடுவதும் உன்
வாடிக்கை!
உன் திருட்டோ
உசந்தத் திருட்டு
கசந்த திருட்டல்ல
வசந்தத் திரட்டு!
உன்னைக்
கையில் பிடிக்க முடியுமோ?
அதைப் போலவே
வார்த்தைகளில் பிடிக்கவும்
வசப்பட மறுக்கிறாய்!
உதவி புரிந்தவர்களை
தினந்தோறுமா
நினைத்துப் பார்க்கிறோம்.
அதுபோலத்தான் உன்னையும்?
நீ வீச மறுக்கிறபோது
நாங்கள் ஏசத்தொடங்குகிறோம்.
நீ
சருகுகளோடு சேர்ந்து
சல்லாபிக்கும் சப்தத்தில்
நாங்கள்
பயந்து போயிருக்கிறோம்
பாம்போ, விலங்கோ, என்று.
நீ
காட்டு மரங்களோடு சேர்ந்து
காட்டுக் கூச்சல் போடுகையில்
எங்கள்
மூதாதையர்களை
நினைத்துக் கொள்கிறோம்.
காட்டு மரங்களில் உரசி
நெருப்பைப் பற்றவைக்கிறாய்
வீட்டு அடுப்பையோ
அணைத்துவிட்டுப் போகிறாய்.
சூரிய வெப்பத்தை
சுமக்கிற போது
அனலாய் வருகிறாய்!
மழையைத் தழுவுகையில்
குளிராய் வருகிறாய்!
கூட்டுச் சேர்க்கைகளின்
மாற்றத்தை
விஞ்ஞானம் கண்டுபிடித்தது.
விஞ்ஞான வளர்ச்சியின்
மூலக்கூறில் ஒன்றாய்
நீயும் இருக்கிறாய்!
மனிதன் – உன்னை
சுவாசிக்க முடியாதபோதுதான்,
மரணமாகிறான்
நீதானே
உயிராய் இருக்கிறாய்!