கால்சியமும் முக்கியத்துவமும்
மனித உடலின் பெரும் பங்கு எலும்புகள். உணவு உட்கொள்வதற்கும், அழகான தோற்றத்தை அளிப்பதற்கும் பற்கள் தேவை. இவை நன்றாக இருக்க வேண்டும் என்றால் இவற்றிற்கு கால்சியம் தேவை.
கால்சியம் என்பது சுண்ணாம்பு. எலும்புகளும், பற்களும் கால்சியம் பாஸ்பேட் எனும் பொருளினால் அமைந்தவை. ஆகவே கால்சியம் எனும் சுண்ணாம்புப் பொருள் நமது உடல்நலத்துக்கு அவசியமானது.
கால்சியம் எலும்புகளையும், பற்களையும் வளர்த்து பலப்படுத்துவதோடு வேறு பல வேலைகளையும் செய்கிறது. இடைவிடாது வேலை செய்துக் கொண்டிருக்கும் இதயம் நன்றாக வேலை செய்வதற்கும் கால்சியம் உதவி செய்கிறது.
மேலும், நரம்புகளுக்கும், இரத்தத்திற்கும் கால்சியம் தேவைப்படுகிறது. தேவையான அளவு கால்சியம் உடல் இல்லையென்றால் எலும்புகள் உறுதியுடன் இருக்காது. எலும்புத் தேய்மானம் ஏற்பட்டு பல பிரச்சனை உண்டாகும். பற்களும் விரைவில் சொத்தைப் பட்டு அகற்ற வேண்டிய நிலைக்கு வரும்.
வளரும் குழந்தைகளின் உடம்பில் போதுமான கால்சியம் இல்லையென்றால் எலும்புகள் மென்மையடைந்து வளர்ச்சி குன்றிவிடும். இதய நோயும் உண்டாக வாய்ப்புள்ளது.
குறிப்பாக கருத்தரித்த பெண்களும், குழந்தைப் பெற்ற தாய்மார்களும் கால்சியம் உள்ள உணவை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
கால்சியம் சத்துள்ள உணவுப் பொருட்கள் வருமாறு:
பால், மோர், முட்டையின் மஞ்சள் கரு, முளைக் கீரை, முருங்கைக் கீரை, பருப்பு வகைகளில் கால்சியம் உள்ளது.
தாம்பூலம் போடுவது நமது நாட்டுப் பழக்கம். தாம்பூலத்துடன் சுண்ணாம்பு சேர்ந்துள்ளது. அதன் சாற்றை விழுங்குவதன் மூலம் உடம்பில் கால்சியம் சேர்கிறது.
கேழ்வரகு (ராகி), சோளம், கோதுமை, தவிடு உள்ள அரிசி, உருளைக்கிழங்கு, முள்ளங்கி, பீட்ரூட், காரட், இறைச்சி ஆகியவற்றிலும் ஓரளவிற்கு கால்சியம் இருக்கிறது.