நல்லதோர் வீணை செய்தே

ஊனை உருக்கி யெடுத்து - அதில்
உதிரத் துளிகள் ஊற்றிய யாக்கை
தேனைப் பருக கொடுத்து - நிதம்
உயிரின் மேலாய் வளர்த்த நங்கை
வானைச் சுருக்கிப் பிடித்து - சிறு
கூட்டில் சிறகு விரித்தப் பறவை
மானைப்போல் துள்ளிக் குதித்து - புது
உலகில் பாதம் வைத்திடும் பெண்மை......


அமிலம் தெளித்த அங்கம் - வீடு
திரும்ப வீழும் கண்ணீரும் காயம்
கமலம் விஞ்சும் வதனம் - காண
இயலாது கருமை தோற்கும் கோலம்
கமழும் நந்தவனப் பூக்கள் - காம
பருந்தால் களவு செய்யப்படும் கொடுமை
நமன் வடிவில் நாயகன் - காதல்
வலைவீசி சந்தையில் விற்றிடும் பெருங்கொடுமை......


நல்லதோர் உலகைப் படைத்து - அங்கு
நாசந்தரும் நரிகளை உலவ விட்டாய்
முல்லையாய் மலர்ந்த பூவை - சின்ன
இமையினுள் இருக்கும் கழுகிற்கு இரையாக்கினாய்
கொல்லாது வதைக்கும் மொழிகள் - வந்து
விழுகின்ற நெஞ்சில் முள்ளாய் நிறையும்
கல்லாய் நிற்கிறாய் இறைவனே - அந்த
உமையாள் போற்றும வீரம் தந்துவிடு......

எழுதியவர் : இதயம் விஜய் (28-Jan-17, 8:39 am)
பார்வை : 200

மேலே