மாண்புமிகு மாணவருக்கு
ஆழியலை போலெழுந்த மாணவவீரா
ஆதரவு தேடாமல் ஆதவித்தீரா
ஆயுதங்கள் ஏதுமின்றி அறவழிப்போரா
அப்படித்தான் அதிசயித்தோம் நீரறிவீரா
தென்முனையில் ஒளியொன்று தெரிகிறதென்று
திக்கெட்டும் சாளரங்கள் திறந்ததுஇன்று
தன்முனைப்பும் தேவையெனும் தருணமதொன்று
தக்கபடி சொன்னவிதம் மிகமிகநன்று
வெண்திரையில் வெட்டியொட்டும் வெறுங்கதையில்லை
வேண்டுமெனக் குவிந்ததிலே சுயநலமில்லை
விண்ணதிர வைத்ததிலே வியப்புகளில்லை
வில்பிறிந்த அம்புகுறி தோற்கவுமில்லை
தன்மரபு காக்கும்பெருத் தகுதியானது
தனிமையில்லை எவருமென்ற தொகுதியானது
தரணியையே திரும்பவைக்கும் திறமையானது
தமிழரிடம் இருக்குதென்று உறுதியானது
சிறுபிள்ளை வெள்ளாமை வீடுசேர்ந்தது
செல்லரிக்க வில்லைதமிழ் வீரமென்றது
சென்றுபல நாடுவாழும் தமிழினமின்று
சேட்டைசெய்யும் பிள்ளைகளால் பெருமைகொள்ளுது
***நன்றி தமிழ்நாட்டு மாணவர்களே***
...மீ.மணிகண்டன்
#மணிமீ