விதி ஒரு புதிர் பாகம் 1

விதி என்பதை தலைவிதி என்றும் கூறுவர். ஒருவனுடைய நிலைபாடு இவ்வாறு இருக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே ப்ரம்மா அவன் தலையில் எழுதிவிட்டதாக ஒரு நம்பிக்கை. ஒருவனுடைய வாழ்க்கையில் நடந்தேறும் நிகழ்ச்சிகள், அவனுக்கு கிட்டும் அனுபவங்கள், அவன் தன் வாழக்கையை நடத்திச் செல்லும் பாதை சில சமயம் எதிர்பாராத திருப்புமுனைகளை சந்திக்கின்றன. இத்தகைய திருப்புமுனைகளையும் விதி என்றும் கூறுவர்.

ஒருவனுடைய வாழ்க்கையில் நேரும் திருப்புமுனை, அதனால் அவனுக்கு கிட்டும் முன்னேற்றம், கௌரவம், வசதியான வாழ்க்கை இதை யாவது விதி என்கிறார்களா? கிடையாது. சில சமயம் இதை அதிர்ஷ்டம் என்கின்றனர். திருஷ்டம் என்றால் கண்ணுக்குப் புலப்படுவது. அதிர்ஷ்டம் என்றால் கண்ணுக்குப் புலப்படாதது. இதையே வேறு விதமாக ‘எதிர்பாராதது’ என்றும் கூறலாம். திறமை, உழைப்பு ஏதுமில்லாமல் சிலரை நல்ல வெகுமதிகள் வந்தடைகின்றன. இவற்றைத்தான் அதிர்ஷ்டம் என்று கூறுகின்றனர்.

கண்ணுக்குப் புலப்படாத ஏதோ ஒரு சக்தி ஒன்று இயங்குகிறது. அதனால் ஒருவனுக்கு ஒரு பெரிய பலன் கிட்டுகிறது. நம் கண்ணுக்குப் புலப்படுவது அவனுக்கு கிட்டும் பெரிய பலன் (வெகுமதி). அதற்கு காரணமாக இருந்த சக்தி நம் கண்ணுக்கு முன்னதாக புலப்படவில்லை. அதைத்தான் நாம் அதிர்ஷ்டம் என்கிறோம். அதிrஷ்டம் - கண்ணுக்கு புலப்படாதது - காரணமாகிறது (Cause). நல்ல பலன் - வெகுமதி - நம் கண்ணுக்கு புலப்படுவது - காரியம் (effect), காரியம் நடந்த பிறகு தான் அதன் காரணத்தை யூகிக்கிறோம். ஆக அதிர்ஷ்டம் என்பது ஏதோ ஒரு வகையில் இயங்குகிறது. அதை ஆய்வு செய்து பார்ப்பது கடினம்.

நல்ல காரியங்கள் நடந்தேறினால் அதை அதிர்ஷ்டம் என்று கூறுவது போல் எதிர்பாராததும் மிகவும் சங்கடமான ஒரு நிலையை ஒருவர் அடைந்தால் அதை விதி என்கிறோம். அதற்கு இணையாக ஆங்கிலத்தில் Fate என்ற சொல் வழக்கிலுள்ளது. ஆக இது ஒரு உலகளாவிய தத்துவம் என்றறியலாம்.

ஒருவர் விபத்தில் சிக்கி இறந்தாலோ, கை கால் இழந்தாலோ உயர் உத்தியோகம் பறிபோனாலோ அந்த பரிதாபகரமான நிலையை விதி என்கிறோம். அதிர்ஷ்டம் comedy (சந்தோஷம்), விதி tragedy (துக்கம்). விதி என்பது முன்பேயே தீர்மானிக்கப்பட்டுள்ளது. உரிய நேரம் வந்ததும் அது ஒரு சம்பவத்தை தோற்றுவித்து வெளிப்படுகிறது. ஒருவர் வெகுவாக பாதிக்கப்படுகிறார். அவர், அவருடைய குடும்பத்தை சார்ந்தவர்கள், உறவினர்கள் அதனால் நேர்ந்த துக்கத்தை பகிர்ந்து கொள்கின்றனர். ஆக ‘விதி கொடியது’ என்றறியப்படுகிறது.

விதி அவ்வாறு செயல்படுவதற்கு காரணம் என்ன? அதை இயக்குபவர் யார்? அது எவ்வாறு செயல்படுகிறது? விதி பற்றி விரிவாக ஆய்வு செய்து பார்த்தால் மேலே கூறப்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்கும். ஒருவனுடைய ஜாதகத்தின்படி அவன் அனுபவிக்கும் கர்ம பலன்கள் அனுபவிக்கப் போகும் கர்ம பலன்களில் விதி என்பதை தனித்து பார்க்க வேண்டியதில்லை.

ஒருவனுடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் அவனை கடைசியில் விதியில் கொண்டுவந்து விடுகிறது. எல்லோருடைய வாழ்க்கையிலும் விதி பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. சிலருடைய வாழ்க்கையில் விதி மகத்தான விளைவை தோற்றுவிக்கிறது. சிலருடைய வாழ்க்கையில் ஓரளவு பாதிப்பை உண்டு பண்ணுகிறது. இன்னும் சிலருக்கு விதி எந்த இடருமில்லாமல் வாழ்க்கை அமைதியாக நடந்தேறி வருகிறது.

இந்த பாகுபாட்டிற்கு காரணங்கள்

1. அவரவர்களுக்கேற்பட்ட ஜாதக ரீதியான பலன்கள் (2) பூர்வ ஜன்ம பலா பலன்கள். இவர்களில் எந்த இடர்பாடுகளையும் எதிர்கொள்ளாமல் அமைதியாக வாழ்க்கையை கழித்தவர்கள் பாக்யசாலிகளல்லர். விதிவசம் கொடிய துன்பத்தை எதிர்கொண்டவர்கள் துர்பாக்யசாலிகளுமல்லர். இந்த இரு வகையினர்களுக்கும் கிட்டின அனுபவம் தாற்காலிகமானவை. ஒரு சுகாநுபவம் தாற்காலிகம் என்னும் பக்ஷத்தில் அது ஸ்வாரஸ்யமற்றது. ஒரு துக்காநுபவம் தாற்காலிகம் என்னும் பக்ஷத்தில் அது ஆறுதலுக்குரியது. ஆக ஒருவன் நிரந்தரமான இன்பம் எது என்பதில் நாட்டம் உடையவனாக தனக்கும் பகவானுக்குமுள்ள நெருக்கத்தை சம்பாதித்து கொள்வது தான் வாழ்க்கையின் லக்ஷியம் என்று செயல்பட வேண்டும்.

ஒரு சிலருடைய வாழ்க்கையில் மட்டும் விதி கொடிய பாதிப்புகளை நிகழ்த்துகிறது. அதற்கு அடிப்படை காரணம் என்ன? ப்ரபஞ்சத்தில் கிரகங்கள் அதனதன் பாதைகளில் வலம் வருகின்றன. காலம் சீராக கடக்கிறது. ஆத்மாக்கள் பூவுலகில் ஒன்றன் பின் ஒன்றாக பிரவேசிக்கின்றன.

பிறக்கும்போதுள்ள கிரகங்களின் நிலைக்கு ஏற்றவாறு ஒவ்வொருவருடைய ஜாதகம் அமைகிறது. ஆக ஒருவருக்கொருவரிடையே ஏற்ற தாழ்வுகள் தவிர்க்க முடியாதவை. ஒருவருடைய வாழ்க்கையில் விதி குறுக்கிடுகிறது. மனதிற்கு கொடிய வேதனையைத் தருகிறது. இது அவசியம் தானா? ( ஸ்ரீ மஹாபாரதம் - ஸம்பவ பர்வம் - 105 அத்தியாயம் ) சந்தனு மஹாராஜாவிடம் கங்காதேவிக்கு ஏழு புத்திரர்கள் பிறந்தன. ஒன்றன்பின் ஒன்றாக கங்காதேவி கங்கை நதியில் அமிழ்த்தி கொல்கிறாள். சந்தனுவை பொருத்த வரை அது கொடூரமாக காணப்படுகிறது. அந்த ஏழு குழந்தைகளுக்கும் பூலோக வாசம் கிட்டாது கங்காதேவியின் மூலம் விமோசனம் கிட்டுகிறது. அது அவளுக்குத் தெரியும். ஆனால் மன்னன் சந்தனுவுக்கு தெரியவில்லை. இதே போல் தான் பூவுலகில் விதியின் காரணமாக நிகழும் பல்வேறு அவஸ்தைகளுக்கும் தகுந்த காரணமிருக்கிறது.

அதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. ஒரு பாதிப்பு பெரிய அளவில் நடந்தால் அதை ‘விதி’ என்கிறோம். அதுவே சிறிய அளவில் சில்லறை சம்பவங்களாக பாதிப்புகளை ஏற்படுத்தினால் அதை ‘வினைப்பயன்’ என்கிறோம்.

இந்த கட்டத்தில் ஒரு நீதி வசனத்தை நினைவு கூர்வது பொருந்தும். நல்ல செயலோ கெட்ட செயலோ, ஒரு கார்யத்தை செய்கிறவன். அதற்கு அநுமதி கொடுக்கிறவன். அதைச் செய்ய தூண்டுகிறவன். அதற்கு சம்மதம் கொடுக்கிறவன் அனைவருக்கும் அதன் பலாபலனை அனுபவிப்பர். ( ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம் 2-29-1 )

இந்த வசனத்தின் அடிப்படையில் உலகில் நடந்தேறி வரும் வினைப்பயன்கள் அனைத்திற்கும் அவரவர்களே பொறுப்பாகின்றனர். ஆக வினைப்பயன்களினால் வரும் பாதிப்புகளை ஒருவன் தன் முயற்சியினால் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிகிறது.

இவற்றிலிருந்து ‘விதி’ என்பது பெரிதும் வித்தியாஸப்படுகிறது. அத்தகைய விதிகளை மனிதன் தன் சுய புத்தியாலோ, சொந்த பலத்தாலோ கட்டுப்படுத்த முடியாது. 1. மரணம் 2. விவாஹ சம்பந்தம் 3. புத்திரர்கள் ஜனனம் 4 . அவர்களது வாழ்க்கை வழி 5. சொந்த வாழ்க்கை முறை. விதி வாழ்க்கையில் ஒரு தடவை தான் நேரும் என்பதில்லை. ஒருவன் பிறந்தது முதல் இறக்கும் வரை ஒன்றுக்கு மேலாக சில சந்தர்ப்பங்களில் விதியின் சாயல் தெளிவாகவே தெரியும். உயர்ந்த குலத்தில் பிறந்த குழந்தை திருடு போய் எங்கேயோ யாரிடமோ வளர்வது விதி வசத்தால், வறுமையின் காரணமாக ஒரு தாய் தன்னுடைய சேயை அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விடுகிறாள். சில ஆண்டுகள் கழித்து அவள் அதை பார்க்க வருகிறாள். அனாதை ஆசிரமத்தை காணவில்லை. குழந்தை பற்றி எந்த தகவலுமில்லை. இளைஞனாக இருக்கும் போது உத்தியோக வாய்ப்பு காரணமாக அவனுடைய வாழ்க்கை முறை மாறிவிடுகிறது.

அநேகர் விவாஹ ப்ராப்தம் விதி வசம் என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். குறிப்பாக பெண்களில் அநேகர் தங்கள் கணவன்மார்களின் மீது அதிருப்தி கொண்டு விவாஹம் நேர்ந்தது தலைவிதியினால் என்று குறைப்பட்டுக் கொள்வது சகஜம். மேலை நாட்டவர் தெளிவாக Marriages are made in heaven என்று கூறுகின்றனர். விதிக்குக் கட்டுப்பட்டுத்தான் மனிதன் வாழ வேண்டும். ஒருவன் சுதந்திரனாக வாழ்ந்து விதியின் போக்கைக் கட்டுப்படுத்த முடியாதா? என்று கேள்வி எழுகிறது? பூவுலகில் நடந்த, நடக்கப் போகும் நிகழச்சிகள் அனைத்தும் முன்பே தீர்மானிக்கப்பட்டவை என்று இதிகாசங்கள் உணர்த்துகின்றனவே; விதியை யாரும் வெல்ல முடியாது என்று கூறுகிறார்கள்.

இந்த போக்கில் தவறு செய்பவர்கள் விதியின் மீது பழி போட்டு தங்களுடைய இயலாமையை நியாயப்படுத்துகிறார்கள். எந்த காரணமுமில்லாமல் விதியின் கொடுமையை எதிர்கொண்டு தங்கள் தலைவிதியை நினைத்து நொந்து கொள்கிறார்கள். சரியான சமாதானம் கிடைக்காமல் அவர்களுடைய வேதனைக்கு தீர்வு இல்லை. விதி என்று யாரும் அதை தனிப்பட்ட முறையில் இயக்கவில்லை. அது தானாக இயங்குகிறது. அதை ஜோதிஷ சாஸ்திரத்தின் துணை கொண்டு புரிந்து கொள்ள வேண்டும்.

பூலோகத்தில் உயிர் வாழும் அனைத்து உயிர் வாழ் இனங்கள் ப்ரபஞ்சத்தில் கிரகங்களின் சஞ்சாரத்திற்கு கட்டுப்பட்டிருக்கின்றன. அதனால் பலவிதமான மாறுதல்களை எதிர்கொள்வது தவிர்க்க முடியாதது. இதை சற்று ஆய்வு செய்து பார்ப்போம். கிரகங்களின் சஞ்சாரம் மனித வாழ்க்கையில் நேரிடையாக பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கில்லை. கிரகசஞ்சாரத்தினால் மனித இனத்திற்கு நேரும் பாதிப்புகளை பக்க விளைவுகள் (Side effect) என்று தான் கருத வேண்டும். ப்ரபஞ்சத்தில் மிதக்கும் இந்த பூமி, இதில் வாழும் ஜீவராசிகளின் க்ஷேமத்திற்கு பஞ்ச பூதங்கள் உறுதுணையாக இருக்கின்றன. மேலும் நவகிரகங்கள் முக்கிய பொறுப்பு வகித்து இந்த பூமியை ஆட்சி புரிகின்றன.

அந்தந்த காலத்தில் பெய்ய வேண்டிய மழை, வீசும் காற்று, விளையும் பயிரினங்கள், மற்றும் வியாபார நிமித்தமாய் பண்ட மாற்றங்கள், ஜனங்களின் மனோநிலை, அவர்கள் எதிர்கொள்ளும் இயற்கை இன்னல்கள் போன்றவைகள் அனைத்தும் நவகிரகங்களின் ஆட்சியின் கட்டுப்பாட்டிலுள்ளன. ராஜாங்க ஆட்சி போன்று ராஜா, மந்திரி, ஸேனாதிபதி, ஸஸ்யாதிபதி, தான்யாதிபதி, அர்க்காதிபதி, மேகாதிபதி, இரஸாதிபதி, நீரஸாதிபதி பதவிகள் சுழற்சி முறையில் நவகிரகங்களிடையே மாறிவிடும். அதற்கேற்றாற் போல் ஒவ்வொரு ஆண்டும் பலாபலன்கள் மாறும்.

நவகிரகங்களில் மிகவும் பலவானான சூர்யனின் சக்தியை நம்மால் நன்றாக உணர முடிகிறது. அடுத்ததாக சந்திரனின் ஒளியை நாம் பார்க்கிறோம். இதர கிரகங்களும் அவைகளுக்கென்ற மாபெரும் சக்தி உடையதாயிருக்கின்றன. அந்த கிரகங்களிலிருந்து வெளிப்படும் கதிரியக்கங்கள் (Radiation effect) ஆகர்ஷ்ண சக்தி (attraction) ப்ரபஞ்சம் முழுவதும் பரவி பூமியில் நிலவும் சீதோஷ்ண நிலை, உயிரினங்களின் மனோ நிலை, ஆரோக்யம் இத்யாதிகளை வெகுவாக பாதிக்கின்றன.

குறிப்பாக மனித இனம் கர்ப்பம் தரிக்கும் காலத்திலும், ஜனன காலத்திலும் கிரகங்களின் தன்மைகள் பதிவாகின்றன. இவை தான் ஜாதகம் ப்ரதிபலிக்கிறது. ஜாதகம் கூறும் பலாபலன்களுக்கும் கிரகங்களுக்குமுள்ள சம்பந்தத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம். ஜோதிஷ சாஸ்திரம் இதை ஆழமாகவும், நுட்பமாகவும் ஆய்வு செய்துள்ளது.

12 வீடுகள், 9 கிரகங்கள், 27 நக்ஷத்திரங்கள், லக்ன பலன், ராசி பலன், தசாபுக்தி பலன்கள் இவைகள் அனைத்தும் கலவையாக இருந்து மனிதன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வாழ்ந்துவரும் போது நூதன அநுபவங்களை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். அவைகளில் நல்லதும், பொல்லாததும் கலந்து தான் இருக்கும். இந்த நிலையில் கிரகங்களின் செயல்பாட்டின் அடிப்படையில் அவைகளை விரோதிகளாகவோ, சிநேகிதர்களாகவோ சித்தரிப்பது ஏற்பதற்கில்லை. கிரக சஞ்சாரங்களில் அவற்றின் காலத்தன்மை (Time punctuality) சீரானது.

அன்றாடம் சூரியன் குறிப்பிட்ட நேரத்தில் உதயமாகி குறிப்பிட்ட நேரத்தில் அஸ்தமிப்பது போல ஏனைய கிரகங்களும் அவைகளின் சஞ்சார காலத்தை சரியாக காப்பாற்றி வருகின்றன. நம்முடைய முன்னோர்கள் ப்ராசீன முறையில் சூர்ய, சந்திர கிரகண காலத்தை முன்னதாகவே நிர்ணயித்தனர். தற்போது விஞ்ஞானிகளும் அவர்கள் பின்பற்றிவரும் நூதன கணித முறையில் நிகழப்போகும் கிரகண காலங்களை நிர்ணயித்து வெளியிட்டுள்ளனர். இந்த அடிப்படையில் இந்த உலகில் வாழ்ந்து வருபவர்கள், இனி பிறந்து வாழப்போகிறவர்களின் வாழ்க்கை கிரக சஞ்சாரத்தின் அடிப்படையில் எவ்வாறு அமையவிருக்கும் என்பது முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளலாம்.

விதி என்பது அசைக்கப்பட முடியாதது. அதன்படிதான் சம்பவங்கள் நடந்தேறும் என்ற வாதம் வலுப்பெறுகிறது. மரணம் என்பது பொதுவாக உரிய நேரத்தில் நிகழக்கூடியது. அது ஒருவனுடைய ஆயுஸ்ஸை பொறுத்துள்ளது. ஆயுஸ் என்பது (அநியதம்) மாறும் தன்மை உடையது. மரணத்தின் வாயிற்படி கெண்டம் என்பார்கள். அந்த கெண்டத்தைத் தாண்டினால் அடுத்து வரும் கெண்டம் வரை ஆயுள் நீடிக்கும்.

சத்தியவான் ஆயுள் முடியும் தருவாயில் சாவித்திரி விழிப்புடனிருந்து யமனை சந்தித்து அவனுடன் சம்பாதித்து தன்னுடைய கணவனை மரணத்திலிருந்து விடுபட்டு காப்பாற்றினாள். நசிகேதஸ் யமலோகம் வரை சென்று நல்ல ஞானம் பெற்று திரும்பி வந்தான். இத்தகைய அற்புதங்கள் யுகாந்தரத்தில் மட்டும் நடந்ததல்ல. இப்போதும் நடைபெற்று வருகிறது. சிலர் மரணத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்றார். அந்த காலக்கட்டம் ‘கெண்டம்’. திறமைசாலிகள் உரிய நேரத்தில் வந்து அவர்களை காப்பாற்றுகின்றனர். அவர்கள் வராவிட்டால் மரணம் நிச்சயம். குற்றுயிராய் கிடக்கும் உடல் மரணத்தை எளிதாய் தழுவுகிறது. சில உடல்கள் உரிய நேரத்தில் ஆஸ்பத்திரியை அடைந்து திறமை மிக்க மருத்துவர்களால் காப்பாற்றப்படுகின்றன. இனிமேல் பிழைக்க மாட்டார்கள் என்று கைவிடப்பட்டவர்கள் கூட பிழைத்தெழுந்துள்ளனர். விதி கொடியது. விதியின் காரணமாகத்தான் ஒருவனின் வாழ்க்கை கெட்டு போய்விட்டது என்று யாரும் குற்றம் சாட்ட முடியாது. வாழ்க்கையில் நடக்கும் அடுக்கடுக்கான சம்பவங்கள் ஒருவனை விதி நிர்ணயித்தை ஒரு இலக்கை அடைவிக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அவன் அன்றாட வாழ்க்கையை சிறப்பான முறையில் நடத்தி ஆத்மகுணங்களை நன்றாக கடைபிடிப்பானாகையில் அவனது வாழ்க்கை ப்ரகாசிக்க வாய்ப்புண்டு. விதி அவனை கொண்டுவிட்ட இடம் ஒரு திருப்புமுனையாக அமைந்து அவன் பெரிதும் முன்னேற்றம் காண்கின்றான். சிலர் உயர் பதவியிலிருந்து விலக்கப்பட்டு வீழ்ச்சியை சந்திக்கின்றனர். அது ஒரு தாற்காலிகம் தான். அதுவே ஒரு திருப்புமுனையாக அமைந்து அவர்கள் முன்பிருந்ததை விட மிகவும் உயர்வான அந்தஸ்தை அடைந்துமிருக்கிறார்கள்.

இந்த வகையினர்களை கருத்தில் கொண்டு தான் விதியை மதியால் வெல்லலாம் என்ற பழமொழியின் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும். எவனொருவன் அன்றாட வாழ்க்கையை குணதோஷமில்லாமல் சிறப்பாக நடத்தி வருகிறானோ அவனுக்கு விதி அநுகூலமாய் செயல்படும். விதியை எதிர்கொண்டு ஆனால் தங்கள் சாமர்த்தியத்தால் வெற்றி கண்டவர்கள் வெகு சிலர் தான். தோல்வி கண்டு வாழ்க்கையில் கஷ்டங்களில் உழல்பவர்கள் ஏராளம்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (28-Jan-17, 7:12 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 149

சிறந்த கட்டுரைகள்

மேலே