இலக்கணமும் இல்லறமும் - தரவு கொச்சகக் கலிப்பா - மரபு கவிதை

இலக்கணமும் இல்லறமும் - தரவு கொச்சகக் கலிப்பா - மரபு கவிதை

ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்


கவிதைசொலும் இலக்கணமும் கல்யாண இலக்கணமும்
நவிலுமொழி யொன்றென்றே நட்பாகச் சொல்லிடுவேன் .
குவித்தகரம் கொண்டுசொலும் குவலயத்தின் கோயில்கள்
செவிகளிலே செப்பிடுமே செழிப்பான நன்னெறிகள் .


எழுதுகின்ற கவிதைக்கும் எடுப்பான சொல்வேண்டும் .
அழுகின்ற பெண்மைக்கும் அன்பான துணைவேண்டும் .
கழுமரத்தில் ஏற்றிவிட்டால் கல்யாணம் தொல்லைதான்.
வழுவுகின்ற இலக்கணத்தால் வாழாது கவிதைகளும்.



உடலின்பம் காணுகின்ற உணர்ச்சியினி லின்பமில்லை
கடலின்பம் கண்டுவிட்ட காட்சியினைப் போன்றதொரு
இடரில்லா இன்பத்தை ஈனுகின்ற புணர்ச்சியினில்
கடனில்லா வாழ்வுதன்னைக் காசினியில் பெற்றிடுவர் .



அழிந்திடுமே யாக்கையிந்த அழகினிலுமே ஆசைகொண்டு
ஒழிந்திடுவாய் குணத்தினாலே ஒன்றிடாம லில்லறத்தில்
வழிந்திடுமே துன்பங்கள் வளமையினைக் குறைத்துவிடும் .
மொழிந்திடுவேன் திருமணங்கள் மொழியில்லா மௌனங்கள் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (3-Feb-17, 5:25 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 45

மேலே