ஒரு சுதந்திர கைதி
விடுதலையாகி வெளியே வந்தபின்னும்
வாராவாரம் காவல் நிலையம் வந்து
கையொப்பமிட்டுச் செல்லும்
குற்றவாளியைப் போலவேதான்
நிம்மதியின்றித் தவிக்கிறது
வாங்கிக் கொண்ட சுதந்திரம்.
தேசியக்கொடி ஏற்றியதன் பின்னர்
புதிய சிறைச்சாலைக்கு
அடிக்கல் நாட்டிவைக்கும்
கொண்டாட்டங்களினால்
எங்களில் குற்றவாளிகள்
பெருகுகிறார்கள் இல்லை,
எங்களில் குற்றவாளிகளை
உற்பத்தி செய்யப்போகிறார்கள்
என்கின்ற உண்மையை
மறந்து விடுகிறோம்.
புதிய தொழில்பேட்டை
ஆரம்பிக்கப்படுகிறது என்கின்ற
அறிவித்தல்களின் மூலம்
விண்ணப்பங்கள் அனுப்பி வைத்து
வேலைக்கு சேர்ந்து விலங்குகள்
செய்கின்ற கைதியாவதில்
உடன்பட்டுப்போகிறோம்.
கள்வர்களைப் பிடித்து காவலுக்கும்
காவலரைப் பிடித்து கள்வனாக்கியும்
வைக்கின்ற காரியங்களை செய்கின்ற
முரண்பாட்டாளர்களை தேர்ந்தெடுத்து
தலைவர்களாக்கும் ஜனநாயகத்தில்
நீதியின் வியாபாரம் பண்டமாற்றாகவோ
பாலியல் லஞ்சமாகவோ இன்னும்
கருப்பு பணத்தாலோ நடைபெறுவதற்கு
நீதி தேவதை கண்ணை கட்டிவைத்த
நீதிமன்றங்கள் அந்தரங்க உத்தரவு
இடுவதற்கு வகுகக்கப்பட்ட சட்டங்களுக்கு
அடிமையாகி வாழ்கிறோம்.
பாவப்பட்ட ஏழைகளிடம் கொள்ளையிட்டப்
பணத்தில் கோவில்கட்டி
கும்பாபிஷேகம் செய்வதிலிருந்து
தப்பித்துக்கொள்கின்ற சாதுர்யங்களில்
கடவுளையும் ஏமாற்றக்
கற்றுக்கொண்டவர்களிடம்
மனிதாபிமானத்தை எதிர்பார்த்து ஏமாறும்
சாதாரணனின் தலையில் எப்போதும்
மிளகாய் அரைக்கும் கூட்டங்களைத்தான்
ஐந்து வருடத்திற்கொருமுறை
அங்கீகாரத்தோடு ஆராதிக்கிறோம்
பிரச்சினைகளை தீர்ப்பார் என்னும்
நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்
முயற்சியோடு நம்மால் நாற்காலியில்
தூக்கி வைக்கப்பட்டவர்கள்
நாற்காலியை விடாமலிருக்க புதிய
பிரச்சினைகளை உற்பத்தி செய்வதின் காரணமாய்
தீராத எங்கள் பிரச்சினைகள் இன்னும்
பிரச்சினையாகவே இருக்கின்றன.
பிரச்சினைகளுக்கு சுதந்திரம் வழங்கிவிட்டு
தீர்வுகளை கைதியாக வைத்திருக்கவே
எதிர்பார்க்கின்ற தேசத்தில் சுதந்திரம் என்பது
ஒரு சுதந்திர கைதிதான் எப்போதும்.
*மெய்யன் நடராஜ்