உணவும் வாழ்வியலும்
உயிர்வாழ வேண்டி உணவுண்ண வாழ்வில்
கயிற்றில் நடபோரைக் காண்போம். – வயிரென்று
ஒன்றிருக்க நாளும் வதைக்கும் பசிபோக்க
நன்குழைத்தும் மாள்வார் நலிந்து.
ருசிக்கென்று இல்லாமல் ரோகத்துள் மூழ்கப்
பசிக்கென்று மட்டும் புசித்து – வசிப்போர்
பொசுக்கென்றுப் போய்விடும் பொல்லாத வாழ்வில்
பசும்பாலும் இன்று பயிர்ப்பு.
ஒட்டாத உண்டிதனை உட்கொள்ள நேர்ந்திட
கிட்டாத ஆரோக் கியத்தாலே – கட்டாயம்
நூலாய் இளைத்து நொடிவதற்கு நோய்வந்துத்
தோலாவோம் வாழ்வைத் தொலைத்து.
சுற்றாடல் மோசம் சுகவாழ்வில் ஊடுருவி
வற்றா நதிக்கு வறட்சியைக் – கற்பித்து
தொடராத நோயைத் தொடவைக்கும் வாழ்வின்
இடர்நின்று நீக்கம் அடை
*மெய்யன் நடராஜ்