காலம்
காலம்!!
படுத்து கிடக்கிறான் பரமேசுவரன்
பார்த்து கொண்டுள்ளான் அல்லாஹ்
பதறிக் கொண்டுள்ளான் பரமபிதா
பகுதிநேர இந்துக்கள்
பகுதிநேர முஸ்லிம்கள்
பகுதிநேர கிறிஸ்தவர்கள்
முழுநேரத் தரகர்கள்...
மாறிக் கொண்டிருக்கிறது மனிதம்...
முழுமையின் முக்கியத்துவம் மூழ்கிப் போனது...
காலம் இலவசமாய்த் தரப்பட்டும்
விலைவைக்கிறது மனிதம்..
உலகின் வரைபடம்
இயற்கையால் பாதியும்
மனிதனால் மீதியும்
வரையப்படுகின்றது...
சில நேரம் அழித்தும்
சில நேரம் திருத்தியும்!..
ஒரே தாளகதியில்
ஓடிக் கொண்டிருந்த காலம்
ஒதுங்கிட ஓய்ந்திடத்
துடிக்கிறது!..
மனித வாழ்வின் உச்சங்கள்
தொடப்பட்டுவிட்டன!..
சில இடங்களை,மனிதர்களை
இன்னும் போய்ச் சேரவில்லை இச்செய்தி!..
இருளா?ஒளியா?
எது முந்தியது...
மனிதனே முந்தியவன்...
இருளையும் ஒளியையும்
அவனே படைத்தவன்!!
சுயநலமதத்தினர்
சொல்லும் மந்திரம்...!
கிழிக்கப்பட்ட
வேதாந்தங்கள்
விஞ்ஞானங்களால் மீண்டும் ஒட்டப்படுகின்றன!
அசிங்கமாய்த் தெரிகிறது
அழகுகள்!..
செயற்கையால்
கிட்டத் தட்ட
எதுவும் சாத்தியம்!..
அசலுக்கு அலைய
ஆட்களில்லை!
கூட்டம் சேர்ந்துப்
பிரிந்து போவது
சமுதாயப் பணி
எனப்படுகிறது!..
இயற்கையான தனிமையில்
என் காலமும்,கவிதையும்!
31/1/17