எப்போது நிமிரப்போகிறாய்

தமிழா
வேர்ச்சொல்லே இல்லாத ஒரு மொழியை
மனதில் வேரூன்ற விட்டுவிட்டு
தன்னை வளர்த்த தாய்த்தமிழை
வீரியக்குறைவென்று வீசுவது உன் மடமை !
நீ
தன்னிடம் உள்ளதைவிட
மாற்றானிடம் உள்ள பொருளுக்கு
மகத்துவம் அதிகம் எனக்கருத்தும்
மன நோயாளியாய் மாறிவிட்டாய்
பல்லாக்கிலமர்ந்து கொண்டு
பாராண்ட குடி மறந்து இன்று
பல்லக்கு தூக்குகின்ற
கூஜாவாய் மாறிவிட்டாய்
நீதி நேர்மை தன்னை மறந்து
சுயநலத்தில் ஊறிவிட்டாய்
ஞாலமே அழிந்திடினும்
மானம் இழந்த பின்
வாழாமை முன்னினிது
எனப்போற்றி வாழ்ந்த இனம்
வந்த பாதை மறந்துவிட்டாய்
அரசியல் சாக்கடையில்
அழுக்குண்ணத் துணிந்துவிட்டாய்
பதவியும் பணமும் கிடைக்குமெனில்
அவர் காரி உமிழும்
எச்சிலையும் நக்குகின்ற
இழி பிறப்பாய் மாறிவிட்டாய்
செங்கோல் ஆட்சி செய்த
செந்தமிழர் நெறி மறந்து
மிதிப்பட்ட போதும் அவர்பாதம் பணிந்து
துதிபாடி மகிழ்ந்து குனிந்தே நிற்கிறாய்
வரலாற்றில் கூன் பாண்டியன் கூட
கோணலில்லா ஆட்சி செய்தான்
நீ எப்போது நிமிரப்போகிறாய்
இறைவனே தவறு செய்யினும்
குற்றம் குற்றமே என்று இடித்துரைத்த
தமிழ் மறவர் பிறந்த மண்ணில்
உன்னையும் ஏந்தியதற்காக
வெட்கித்து தலைகுனிந்து
விம்மி அழுகிறாள் தமிழன்னை !!

எழுதியவர் : அசோகன் (7-Feb-17, 7:51 am)
சேர்த்தது : சாலூர்- பெஅசோகன்
பார்வை : 73

மேலே