கானம் பாடும் கவிதை

வெங்கதிர் நிலம் விழுந்து - வாவி
நீந்தும் கமலம் அவிழ்ந்திட
புங்கையது கிளைகள் விரித்து - நிழலில்
கிளிகள் கொஞ்சி களித்திட
சங்கின் நாதம் பிறந்து - முகில்
கறுத்து மழைதனைப் பொழிந்திட
பொங்கி வழிந்திடும் நதிகள் - செழித்து
சோலையாய்ப் பூமி நின்றாடுமே......

பொன்னொளி திங்கள் சிரித்து - மூடும்
குவளை விழிகள் திறந்திட
மின்னல் ஒளிரும் நொடிதனில் - தாழை
அலர்ந்து மணம் கமழ்ந்திட
மின்மினிகள் இரவில் விளக்கேற்றி - சிறு
வெளிச்சம் ஒன்றைத் தந்திட
சன்னல் தீண்டும் தென்றலில் - வாடை
குளிர் உயிர்களை மயக்குமே......

குயில்கள் கூவிடும் தோப்பில் - நிதம்
இன்னிசை கச்சேரி நடந்தேற
மயில்கள் உளம் நெகிழ்ந்து - புது
நடன அரங்கேற்றம் நிகழ்த்திட
வயல் விளையும் நெல்மணிகள் - கண்டும்
கேட்டுந்தன் தலையினை அசைத்திட
இயற்கை தீட்டுமிந்த ஓவியங்கள் - உலகில்
கானம் பாடும் கவிதையாகுமே......

எழுதியவர் : இதயம் விஜய் (13-Feb-17, 2:48 pm)
பார்வை : 256

மேலே